விதை சேகரிப்பு
மரங்கள் நடப்பட்ட 4ம் வருடத்தில் இருந்து பூக்கத் தொடங்குகின்றன. இம்மரத்தின் பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறும் பொழுது சேகரிக்கப்பட வேண்டும். ஆவணி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் வரை பழங்கள் சேகரிக்க உகந்த மாதங்கள் ஆகும். மரத்தின் மீது ஏறியோ அல்லது மரக்கிளைகளை உலுக்கியோ பழங்கள் சேகரிக்கப்படுகின்றன. பழங்கள் சேகரிப்பின் போது மரத்தின் அடியில் பாலீத்தின் விரிப்புகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நன்கு பழுத்த அடர் மஞ்சள் நிறமுடைய பழங்களை மட்டுமே சேகரிக்க வேண்டும். பசுமை நிறமுடைய பழங்கள் முதிரா பழங்கள் ஆகும். எனவே இவற்றைச் சேகரிப்பதில் எப் பலனுமில்லை.
பழத்தை கையாளும் முறைகள்
கடம்ப மரத்தின் பழங்களை சேகரிக்க மூங்கில் கூடைகள் அல்லது சாக்குப் பைகள் பயன்படுத்தப் படுகின்றன. பழுத்த பழங்களின் பழுப்பு நிற சதைப்பற்றுள்ள பகுதிகளை நீக்குவது எளிதானது. இதன் கடினத் தன்மையை நீக்குவதற்கு ஓர் இரவு முழுவதும் லேசான அமிலத் தன்மை கொண்ட நீரில் (pH 5.5 - 5.6) ஊறவைக்க வேண்டும். ஊற வைக்கப்பட்ட பழங்கள் கடினத் தன்மையை இழந்து மிருதுவானதாக மாறுகின்றது. இதை மூங்கில் கூடைகளில் இட்டு நீர் சேர்த்து கைகளால் பிசையும் பொழுது விதைகள் அனைத்தும் நீரின் அடியில் தங்கும். இதில் மேலிருக்கும் நீரை மட்டும் மெதுவாக கீழே ஊற்றிவிட்டு விதைகளை மட்டும் தனியே பிரித்து சேகரித்து எடுத்து கொள்ளலாம். இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் நிழலில் உலர்த்தப்பட்டு காற்றுப்புகாத ஜாடிகளில் சேமித்து வைக்கலாம். மற்றொரு முறையில் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி சில நாட்கள் கழித்து வெட்டப்பட்ட பழங்களை கையால் பிசைந்து விதைகளை தனியே பிரித்து எடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு கிராம் விதைகளில் சராசரியாக 23,000 முதல் 25,000 விதைகள் இருக்கும்.
விதைகளை சேமித்தல் மற்றும் முளைப்புத் திறன்
உலர்த்தப்பட்ட விதைகளை காற்று புகாத கலன்களில் சேகரித்து வைக்கலாம். இந்த விதைகளை 10 மாதங்களுக்குப் பிறகு, இதன் முளைப்புத் திறனை பரிசோதித்து பார்த்த பொழுது, முளைப்புத் திறன் குறைவாகவே இருந்தது. ஆனால் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளின் முளைப்புத் திறன் ஒரு வருடத்திற்கும் மேல் முளைப்பு திறன் குறையாமல் இருக்கும். இம்மரத்தின் விதைகளை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் படி குளிர்ப்பதன முறையில் கடம்ப மரத்தின் விதைகளை சேகரித்து வைத்தால் இரண்டு வருடங்களுக்கு அதன் முளைப்புத் திறனை பாதுகாக்க முடியும்.
நாற்று உற்பத்தி
0.1 கிராம் அளவுள்ள விதைகளை (சுமார் 2500 விதைகள்) ஆற்று மணல் நிரம்பிய சோதனைத் தட்டில் (60 செமீ 30 செமீ ) தூவ வேண்டும். இதை அதிக வெப்பமில்லாத நிழல் பகுதியில் வைக்க வேண்டும். மழைக்காலங்களில் தார்பாலின் அல்லது பாலிதீன் போட்டு சோதனை தட்டுகளை மூடவேண்டும். ஏனெனில் மழை துளிகள் பட்டு விதை மேலே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகளை எறும்புகள் தாக்காத வண்ணம் தட்டுகளைச் சுற்றிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். விதைகள் விதைத்த 12-15 நாட்களுக்கு பின்னர் முளைக்க தொடங்குகின்றன. விதைகளின் முளைப்பு திறன் 90% ஆக இருக்கும். 5 செ.மீ. மேல் வளர்ந்த இளம் நாற்றுக்களை செம்மண், மணல் மற்றும் காய்ந்த எரு முறையே 2:1:1 என்ற விகிதத்தில் கலந்த மண் கலவையை நிரப்பிய பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும். இந்த நாற்றுக்களை 6 மாதங்களுக்கு பிறகு 45 செ.மீ. உயரமாக வளர்ந்தபின் நடவு செய்ய ஏதுவாக இருக்கும்.
இந்த நாற்றுக்களை நோய் தொற்றுகள் தாக்காமல் இருக்க நல்ல காற்றோட்டமான இடங்களில் வைக்க வேண்டும். பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தி நோய் தொற்றுகளில் இருந்து காப்பாற்றலாம். நேரடியாக விதைகளை வயல்களில் விதைத்தால், வறட்சி மற்றும் அதிகமான சூரிய ஒளியினால் முளைப்பு திறன் இருக்காது.
2.விதையில்லா இனப்பெருக்கம்
நன்கு நேர்த்தியாக வளர்ந்த மரத்திலிருந்து சிறு தண்டுகள் மூலம் பதியன் முறையில் புதிய செடிகள் உருவாக்கலாம். பதியனின் குறைந்த பட்ச அளவு சுமார் 15-20 செ.மீ நீளம் இருக்க வேண்டும். தண்டுகளை சுமார் 2000 ppm IBA வேர்தூண்டிகளை தடவி நடவு செய்யும் போது அதிகப்படியான வேர்களை காண முடியும். இம்முறையில் தண்டின் அளவு, காலநிலை மற்றும் ஊடகத்தைப் பொறுத்து வேர்விடும் திறன், வளர்ச்சி போன்றவை மாறுபடும்.
கடம்ப மரக்கன்றுகள் 6 - 7 மாதங்களில் 30 செ.மீ. உயரம் வரை வளரும். நியோலாமர்க்கியா கடம்ப மரம் வேகமாக வளரும் தன்மை கொண்டது. மேலும் காடு வளர்ப்பு மற்றும் விவசாய காடுகளில் வளர்க்கும் மர இன வகையாக இது உள்ளது. வயல்களில் 4மீx3மீ , 4மீx4மீ அல்லது 5மீx4மீ என்ற இடைவெளிகளில் நடப்படுகின்றது. பிளாஸ்டிக் தட்டுகளில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்த பின், பெரும்பாலான நாற்றுக்கள் உயிர் பிழைக்கின்றன.