An open source content management platform.
சாகுபடி முறை
கடம்ப மரத்தின் வளர்ச்சி விகிதம் 6 - 8 வருடங்களில் அதிகமாக உள்ளது. 8 - 10 வருட வயதான மரங்கள் வெட்டுவதற்கு ஏற்ற பருவமாக இருக்கும். இந்தோனேசியாவில் கடம்ப மரங்களை 4 வருடங்களில் அறுவடை செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் மரங்களின் வளர்ச்சியை பொறுத்து 7 வருடங்களில் அறுவடை செய்யலாம். காகிதக் கூழ் தயாரிப்புக்கு 4 வருட காலத்திலும், பென்சில், தீக்குச்சி, செயற்கை பலகைகள் போன்ற உபயோகங்களுக்கு 7 வருட காலத்திற்குப் பிறகும் அறுவடை செய்யலாம்.
கடம்ப மரம் சூரிய ஒளி சார்பு கொண்டது. அதிகமான சூரிய ஒளி இம்மரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இளம் நாற்றுகளை முதல் ஒரு வருடத்திற்கு நன்கு பாதுகாக்க வேண்டும். இளம் நாற்றுகளில் பக்கக் கிளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வயதான நாற்றுகளில் பக்கக் கிளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
களை எடுத்தல்
இம்மரத்தின் இளம் நாற்றுகள் களைகளால் எளிதில் பாதிப்புக்குள்ளாகும். எனவே நடவு செய்த பின்பு வயல்களில் களைகள் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியமானது. வெளிநாடுகளில் வேதியியல் களைக் கொல்லிகளைப் பயன்படுத்தியும் மற்றும் நேரடியாக ஆட்களை வைத்தும் களைகளை அகற்றுகின்றனர். நடவு செய்யப்பட்டதிலிருந்து களைகளை வளரவிடாமல் அகற்ற வேண்டும். முதல் வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் அடுத்து வரும் வருடங்களில் மரத்தின் நிழல் தரையில் விழும் வரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் களையெடுக்க வேண்டும்.
உரமிடுதல் மற்றும் நீர்ப்பாய்ச்சுதல்
வளம் குன்றிய நிலங்களில் தொழு உரமிடுதல் அவசியம் ஆகும். யூரியா மற்றும் ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் (TSP) போன்ற உரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு நாற்றிற்கு 15 கிராம் அளவு யூரியாவை வேர் பகுதியைச் சுற்றிலும் தூவினால் நாற்றின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கவாத்து மற்றும் இடை நாற்றுகளை நீக்கம் செய்தல்
பக்க கிளைகளை வெட்டுவதன் மூலம் நேரான உயர்ந்த மரங்கள் நமக்கு கிடைக்கும். மேலும் தீ பரவுவதால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். ஆனால் கடம்ப மரங்களில் இயற்கையாகவே இறந்த கிளைகள் உதிர்ந்து விடுகின்றன. இடை மரங்களை அல்லது அதிகமாக உள்ள மரங்களை வெட்டுவதன் மூலம் நன்கு தடிமனான மரக்கட்டைகள் நமக்கு கிடைக்கும். மரங்களின் சுற்றளவும் அதிகரிக்கும். நடப்பட்ட 2-4 வருடங்களில் இடை நாற்றுகளை நீக்கம் செய்யலாம். நாற்றுகளின் அடர்த்தியைப் பொறுத்து 1 முதல் 3 முறை இடை நீக்கம் செய்ய வேண்டும். 15 வருட சுழற்சியில் (இடைவெளி 3 x 2 மீட்டர்) மூன்று முறை இடை நாற்றுகளை நீக்கம் செய்யலாம் (2,4 மற்றும் 8 வருடங்களில்) இவ்வாறு செய்வதன் மூலம் அதிக கன அளவு உள்ள மரக்கட்டைகள் கிடைக்கும். 3 x 3 மீ இடைவெளியுள்ள (13 வருட சுழற்சியில்) தோப்புகளில், 2, 4 மற்றும் 7 ம் வருடங்களில் மரங்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். 10 - 15 வருட சுழற்சியில் 4 x 4 மீட்டர் அளவுள்ள தோப்புகளில் 3 - 4 வருட வயதுள்ள மரங்களில் ஒரு முறை இடை நீக்கம் செய்ய வேண்டும்.
வேளாண் காடு வளர்ப்பு
கடம்ப மரத் தோப்புகளில் விவசாயப் பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யும் பொழுது எந்தவிதமான இடையூறுகளையும் இம்மரங்கள் பயிர்களுக்கு விளைவிப்பது இல்லை. ஊடு பயிர்களின் மகசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் 5 x 5 மீட்டர் அல்லது 4 x 4 மீட்டர் இடைவெளி தேவை. மானாவாரி பயிர் சாகுபடி கடம்ப மரத் தோப்புகளில் முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய முடியும். மேலும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பெரும்பாலும் வயல்களின் வரப்புகளில் கூட இம்மரங்களை வளர்க்கின்றனர். விவசாயிகள் இம்மரங்களை வேளாண் காடுகளாக வளர்ப்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.