An open source content management platform.
கடம்ப மரம் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. கடம்ப மரத்தின் தாயகம் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசியா ஆகும். இதன் தாவரவியல் பெயர்: நியோலாமார்க்கியா கடம்பா (ராக்ஸ்ப்) போஸ்ஸர் (ஆன்த்தோசெப்பாலஸ் கடம்பா).
இந்தியாவில் காணப்படும் இடங்கள்
1997-ஆம் ஆண்டு இந்திய அரசால் அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடைய இம்மரம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றது. பொதுவாக கடம்ப மரம் கடல் மட்டத்திருந்து 1000 மீ. உயரத்தை விட குறைவாக உள்ள இடங்களிலும், வருடத்திற்கு 1500 மி.மீ. மழையளவு உள்ள இடங்களிலும் வளர்கின்றது.
கடம்ப மரம் பொதுவாக அடர்ந்த காடுகளிலும், ஈரப்பதமான இடங்களிலும், ஆற்று வண்டல் மண் உள்ள இடங்களிலும், சிற்றோடைகளின் ஓரங்களிலும் வளர்கின்றது. இம்மரம் பரவலாக தென் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகளிலும், வட இந்திய வெப்ப மண்டல ஈரப்பதமான இலையுதிர் காடுகளிலும், மேலும் வெப்ப மண்டல நன்னீர் சதுப்பு நில காடுகளிலும் காணப்படுகின்றது.
மரத்தின் பொதுப்பண்புகள்
கடம்ப மரம் வேகமாக வளரும் தன்மை கொண்டது. இம்மரம் அதிகபட்சமாக 25 மீட்டர் உயரத்திற்கு நேராகவும் பக்க கிளைகள் இல்லாமலும் வளரும் தன்மை கொண்டது. மேலும் அதிகபட்சமாக 45 மீட்டர் உயரமும், 100 - 160 செ.மீ விட்டமும் வளரக் கூடியது.
மர வேலைப்பாடு
இம்மரத்தின் கட்டைகளில் வைரப்பகுதி குறைவாக காணப்படுவதால் மர வேலைப்பாடுகளுக்கு சிறந்து விளங்குகிறது மற்றும் கை இயந்திரங்களின் மூலம் இழைத்து எளிமையாக வேலை செய்யவும் முடியும்
மரக்கட்டையின் பயன்கள்
கடம்ப மரத்தின் கட்டைகள் பென்சில், தீக்குச்சி, ஒட்டு பலகைகள், மரப்பெட்டிகள், கட்டுமான வேலைப்பாடுகளிலும், உணவு கலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அரைக்கும் இயந்திரங்கள், அடைப்புப் பெட்டிகள், மரப்பலகை, கூடை, உத்தரம், வளைந்த மரப்பாகங்கள், அலமாரிகள் தயாரித்தல், அறைகளை பிரித்தல், பீப்பாய்கள், நாற்காலிகள், வலிமையான பெட்டிகள், கப்பலின் மேல் தளம் செய்தல், சமையல் அறையில் உள்ள மரப்பொருட்கள், மெல்லிய மரப்பொருட்கள், மரப் பொம்மைகள், சமையலறை அலமாரிகள், அலுவலக மரச்சாமான்கள், மரக்கதவுகள், மரப் படிக்கட்டுகள், மர பீடங்கள், உடைகள் வைக்கும் பெட்டிகள் ஆகியன தயாரிக்க பயன்படுகின்றது.