விதை மற்றும் நாற்றங்கால் தொழில் நுட்பங்கள்
பொதுவாக, வறண்ட சூழல் நிலவும்போது, யூக்கலிப்டஸ் மரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கள் பூக்கின்றன. அவை 3 மாதங்களில் முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் இனப்பெருக்க முறை என்பது, வலிமையான வெளிக்கலப்புடன் கூடிய கலப்பு இனச்சேர்க்கை முறையாகும். ஒரே மரத்தின் மகரந்தச் சேர்க்கையானது, யூக்கலிப்டஸ் காய்கள் உற்பத்தி, விதை உற்பத்தி குறைபாடு மற்றும் வீரியமற்ற விதைகள் உருவாக காரணமாகின்றது.
யூக்கலிப்டஸ் காய்கள் பழுக்கும் போது, பச்சை நிறத்தில் இருந்து, சிவப்பு கலந்த காபிக் கொட்டை நிறத்திற்கு மாறும். பழுத்து விட்டால், அவற்றின் மேற்புறத்தில் அழுத்தமான முகடுகள் உருவாகி இருக்கும். மரத்தில் இருக்கும் போது, இந்த காய்கள் வெடிக்க, இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும். மரத்தில் இருந்து பறிக்கப்பட்டு விட்டாலும், அவை வெடித்து அதற்குள் உள்ள விதைகளை, நிழலில் உலர்த்தினால் 2 அல்லது 3 நாட்களில் உதிர்ந்துவிடும். இம்மரம் ஒவ்வொரு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலிமையான விதைப்பயிரை கொடுக்கும்.
இவற்றின் விதைகள் வெளியேறும் போது அதனுடன் சேர்ந்து பதறுகளும் வெளிப்படும். அப்பதறுகளை நாம் எளிதாக கண்டறிந்து விட முடியும். பதறுகள் நீளமானதாகவும், சிறியதாகவும் இருக்கும்போது, அவற்றில் உள்ள விதைகள் பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். தோராயமாக ஒரு கிராமில் 700 விதைகள் இருக்கும். இந்த விதைகளை காற்றுப்புகாத
அடைப்பான்களில் நிரப்பி 3°C முதல் 5°C செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 6 முதல் 10 சதவீதம் ஈரப்பதம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் விதைகளை 10 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க முடியும்.
விதை நேர்த்தி செய்யாமலேயே யூக்கலிப்டஸ் விதைகள் முளைக்கும் தன்மை கொண்டவை. வெளிச்சமான இடத்தில் சரியான ஈரப்பதம் மற்றும் 32o C செல்சியஸ் வெப்பநிலை இருந்தால், இவற்றின் முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். இந்த விதைகளை எறும்புகள் தின்று விடும் என்பதால், விதை சேமிப்பு மற்றும் முளைப்பு காலங்களில் இவற்றை எறும்புகளிடம் இருந்து பாதுகாப்பு மிகவும் அவசியம். அனைத்து யூக்கலிப்டஸ் இன மரங்களுக்கும், முளைப்புக்கான மண் அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். உரம் கலந்த மண்ணோடு 1:1 என்ற விகிதத்தில், மணல் கலந்து பயன்படுத்த வேண்டும்.
விதைகளை, தடையற்ற நீர்வடிகால் வசதி மற்றும் நன்கு சுத்தம் செய்யப்பட்ட மண்ணில் விதைக்க வேண்டும். அவ்வாறு விதைத்த பின் அவற்றின் மீது மணல் போன்ற பொருட்களால் மெல்லிய படலம் போன்று மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் பாய்ச்சும் போது, விதைகள் வெளியே வந்துவிடாதபடி, போதுமான ஆழத்தில் அவற்றை விதைக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மிகவும் ஆழமாகப் புதைத்துவிடவும் கூடாது.மேற்கண்ட இந்த முறையில் முளைப்பு என்பது 4 அல்லது 5 நாட்களில் நடைபெறும். விதைகள் முளைத்து, அவை 5 முதல் 7 சென்டி மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நிலத்தில் இருந்து, மண்ணோடு பெயர்த்து, பாலிதீன் பைகளில் மாற்றி வைக்க வேண்டும். செடிகளை பாலிதீன் பைகளில் வைத்த பிறகு, அவற்றை 6 வாரங்களுக்கு நிழல் மறைப்புகளுக்குக் கீழ் வைக்க வேண்டும். இவை, 4 அல்லது 5 மாதங்களில், வெளியே எடுத்து நடவு செய்யும் அளவுக்கு அதாவது 30 செ.மீ. உயரம் வளர்ந்து விடும். நாற்றங்காலுக்கு 3 மாதங்களுக்கு நாள்தோறும் நீர் ஊற்ற வேண்டும். நாற்று அழுகலில் இருந்து பாதுகாக்க, (காப்பர் டை- ஆக்சைடு கொண்ட) பூஞ்சாணக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.ஒரு கிலோ யூக்கலிப்டஸ் விதைகளில், 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் செடிகள் முளைத்து எழும்பும்.
குளோனல் இனப்பெருக்கம்
யூக்கலிப்டஸ் மரங்களில் விதையில்லா இனபெருக்க முறைகளில் ஒன்றான குளோனல் பெருக்கத்தில், தரையிலிருந்து 4 செ.மீ. உயரத்திற்குள் வரை மறுதாம்பு இளங்குச்சிகள் வருமாறு தூண்டப்படுகின்றன. இம்முறையில், பெறப்பட்ட தளிர்களை மீண்டும் வேர்பிடிக்கச் செய்து 1 x 1 மீட்டர் இடைவெளியில் மறுதாம்பு நாற்றுகளுக்காக 6 மாதங்கள் வளரவிடப்படுகின்றன. 3 அல்லது 4 வாரங்களில் இவை துளிர்த்துவிடும். அவை பிறகு, 2 இலைகள் மற்றும் தண்டு உள்ளனவாக பிரிக்கப்பட்டு, இனப்பெருக்க கூடாரங்களில், 3000 ppm செறிவூட்டப்பட்ட இன்டோல் பியூட்ரிக் அமிலம் என்ற வளர்ச்சிக்கான ஊக்கியில் நேர்த்தி செய்துபின், வெர்மிகுலைட் ஊடகத்தில் வைக்கப்படுகின்றன.
இவ்வகை நாற்றுகள் 3 அல்லது 4 வாரங்களில் வேர் பிடிக்கத் தொடங்கும். இவ்வாறு வேர் பிடித்த பின், வலிமையாக்குவதற்காக அவை அதிக சூரிய ஒளியில் வைக்கப்படுகின்றன. அந்த சமயத்தில் நீர் ஊற்றுவது 3 அல்லது 4 மாதங்களுக்கு குறைக்கப்படுகிறது. இந்த நாற்றுகள் வளர்ந்து, 6 மாதங்களில் நடவு செய்ய தயாராகிறது