சாகுபடி நடைமுறைகள்
நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தில் களையெடுத்தல் மற்றும் புதர்களை அகற்றுதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் களைகளை எதிர்த்து வளர்வதில், யூக்கலிப்டஸ் செடிகள் வலிமையற்றவை. மழை அதிகமாக உள்ள பிரதேசங்களில், யூக்கலிப்டஸ் மரங்கள் பசுமை படர்ந்து கிளைபரப்பி மூடும்வரை, ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை களையெடுத்தல் வேண்டும். இதனை, 2 முதல் 3 ஆண்டுகளுக்கு செய்தல் அவசியம். போதுமான அளவுக்கு களைக்கட்டுப்பாடு செய்யாவிட்டால், மரங்கள் சாகுபடி முற்றிலும் தோல்வியில் முடிந்துவிடும்.
நடவு செய்தலைப் பொறுத்தவரை, 3 x 2 மீட்டர் இடைவெளியில் இருந்து, 3 x 1 மீட்டர் இடைவெளி நடவு செய்யப்பட்டிருத்தல் சிறப்பு. அதாவது, ஒரு ஹெக்டேருக்கு 1667 முதல் 2470 வரை மரங்கள் இருக்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டுக்கான செடிகளை, 2 x 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்தல் போதுமானது. இந்தியாவில் யூக்கலிப்டஸ் மரங்கள் ஒரே நேரத்தில் வெட்டப்படுகின்ற வகையில், கூழ்மரங்களுக்காக (Pulpwood) சாகுபடி செய்யப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்பட்ட பின்னர் அடிக்கட்டை மரத்தில், சுற்றிலும் அதிகமான மறுதாம்பு கிளைத்தல் இரண்டு முறை நடைபெறுகிறது. மூன்று முறை மரம் வெட்டப்பட்ட பிறகு, அடிக்கட்டை தோண்டி எடுக்கப்பட்டு, புது நாற்றுகள் நடப்படுகின்றன.
கூழ் மரங்களுக்கான (Pulpwood) சாகுபடி என்பது, உரங்களின் பயன்பாடு மற்றும் நீர்ப்பாசன வசதி ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. இந்தச் சூழலில் மரங்களை 5 முதல் 6 ஆண்டுகள் வரை வளர்க்கலாம். 2 x 2 மீட்டரில் இருந்து 4 x 4 மீட்டர் இடைவெளிக்கு 3 வருடங்கள் கழித்து மாற்றி அமைத்து வளர்க்கும்போது இம்மரங்கள் தாங்குமரங்களாக (பூட்டுகளாக), கம்புகள், குச்சிகள், மற்றும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நன்றாக விளைந்த மரங்கள், 10 ஆண்டுகள் வரை வெட்டப்படாமல் விடப்பட்டு, அவைகள், பிளைவுட் எனப்படும் ஒட்டுப்பலகை செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக, நடவு செய்யப்படும் மரக்கன்றுகளில் நிலையான மற்றும் சீரான வளர்ச்சி இருக்கவேண்டுமாயின், அவற்றிற்கு உதவும் விதமாக, ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் கலப்பு உரம் (3:2:1 என்ற விகிதத்தில்) இட வேண்டும். கோடை காலங்களில், இலைக் கருகலால் நுனிக்கிளை காய்ந்து வறண்டு போவது அதிகமாக இருக்கும். இதனை கண்காணித்தல் அவசியம். இதனைத் தடுக்க மண்ணின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொரு மரத்திற்கும் போரெக்ஸ் மருந்தை, 10 கிராம் முதல் 20 கிராம் வரை இட வேண்டும். கோடை காலங்களில் மரங்களை வெட்டுவதால், அவற்றில் மறுதாம்புகள் முளைக்க கால தாமதமாகும். அத்துடன் அடிக்கட்டைகள் பட்டுப்போவதும் அதிகமாக நிகழும்.
மரங்களை வெட்ட, மின்சார ரம்பங்களைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது. மலிவாக கிடைக்கக்கூடிய இந்த மின்சார ரம்பங்கள், வேகமாக மரங்களை அறுப்பதற்கு உதவும். மரப்பட்டைகளுக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தாது. அடிக்கட்டைகளில் மறுதாம்பு துளிர்த்து விட்டால், 6 மாதங்களுக்குப் பிறகு, ஒரு வேர்க்கட்டைக்கு ஒன்றோ அல்லது இரண்டோ மறுதாம்பு மட்டுமே விடப்பட வேண்டும். மற்ற தளிர்களை வெட்டிவிடுதல் நன்று.
வேளாண் காடு வளர்ப்புக்கான நடைமுறைகள்
யூக்கலிப்டஸ் மரங்கள், ஒடுக்கமான கிளை அமைப்பும், நேர்க்குத்தாகத் தொங்குகின்ற இலை அமைப்பும் கொண்டவை. இவை, சூரிய ஒளியை நிலப்பரப்புக்கு எளிதாக கடத்துகின்றன. சாதாரணமாக, 3 x 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ள மரங்களுக்கு கீழே, ஊடுபயிராக, நிலக்கடலை, மிளகாய், வெங்காயம் மற்றும் பருப்பு வகைப் பயிர்களை ஓராண்டுக்கு சாகுபடி செய்யலாம்.
5 x 2 மீட்டர் இடைவெளியில் நடப்பட்டுள்ள மரங்களுக்கு நடுவே ஊடுபயிர்களை 3 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்ய முடியும். இதற்கு மாற்றாக இணை வரிசை முறையில் 5 x 1 x 1 மீட்டர் இடைவெளியில் உள்ள நிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மரங்களும் அத்துடன் அதிகப்படியான வேளாண் பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும்.
உற்பத்தியை உச்சபட்சமாக அதிகரிப்பதற்கு குளோனல் நாற்றுகளின் தேர்வு மிகவும் இன்றியமையாத அம்சமாக கருதப்படுகிறது. நிலத்தின் தன்மைக்கேற்ப மிகச்சரியான மரபணு தன்மை கொண்ட குளோன் வகையை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. இவற்றில் சில, ஆழமான மண்ணுக்கு ஏற்றவை. சில உவர் மண்ணில் நன்றாக வளரக்கூடியவை. சில குளோனல் நாற்றுகள் சரளை மண்ணுக்கு உகந்தவை. எனவே குறிப்பிட்ட இடத்திற்கு ஏற்றபடி குளோனல் பெருக்க நாற்றுகளை தேர்வு செய்தல் முதன்மையானது. அத்துடன் தைல மரச்சாகுபடி திட்டத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணியாகவும் இது பார்க்கப்படுகிறது.
IFGTB EC 4 ன் உற்பத்தியானது, ஒரு ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 கன மீட்டர் ஆகும். அதாவது, வர்த்தக ரீதியிலான மற்ற ரகங்களை ஒப்பிடும்போது, இதன் உற்பத்தி, 25 சதவீதம் அதிகம். முதன்மையான வளர்ச்சி மற்றும் வேர் பிடிக்கும் ஆற்றலால் IFGTB EC 4 ரகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL), சேஷசாயி காகிதம் மற்றும் அட்டைகள் நிறுவனம் (SPB), ஜே.கே. காகித ஆலை, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் மற்றும் விவசாயிகள் மூலம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் தென் மாநிலங்களில், 2008-ம் ஆண்டு ‘லெப்டிசிபே இன்வேசா’ (Leptocibe Invasa) என்ற பூச்சியின் பெருக்கத்தால் பெரும்பான்மையான நாற்று ரகங்கள் செழித்தோங்கி வளர முடியவில்லை. இதைத் தொடர்ந்து இந்த பூச்சியை எதிர்த்து வளரும் குளோன்களை கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, பூச்சிகள் பரவிய முக்கிய இடங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளடக்கிய 18 இடங்களில் ஆய்வுகள் மூலம் ரகங்கள் சோதித்து பார்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ‘லெப்டிசிபே இன்வேசா’ பூச்சி எதிர்கொள்ளுதல், மற்றும் அதிக உற்பத்திக்காக, 2014-ம் ஆண்டு IFGTB EC 5, IFGTB EC 6, IFGTB EC 7, IFGTB EC 8, IFGTB EC 9, IFGTB EC 10, IFGTB EC 11 ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மற்ற வணிகப் பயன்பாட்டுக்கான மரங்களைப் போலவே, IFGTB EC 6 மற்றும் IFGTB EC 9 ஆகியவற்றின் வளர்ச்சி, ஒப்பிடும்படியான வளர்ச்சியாக உள்ளது. நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாய நிலங்களில் IFGTB EC 11 செழித்து வளரக்கூடியது. IFGTB EC 6 ரகம், தாவர வகை பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமை ஆணையத்திடம் இருந்து அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பைப் பெற்றுள்ளது, இந்த ரகத்தை அதிகப்படியாக இனப்பெருக்கம் செய்யவும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் வர்த்தக உரிமமும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.