அறிமுகம்

தைல மரம் அல்லது கற்பூர மரம் என்று அழைக்கப்படும், யூக்கலிப்டஸ், மிர்ட்டேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த வகை மரங்கள் கடுமையான வெப்ப நிலையையும், அதிகப்படியான மழையையும் தாங்கி வளரக்கூடியவை. யூக்கலிப்டஸ் 250 - 600 மி.மீ. மழைப்பொழிவை பெறக்கூடிய பிரதேசங்களுக்கு ஏற்றவை ஆகும். அதேநேரம் மிக அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களிலும், நீர்தேங்கும் பகுதிகளிலும் செழித்தோங்கி வளரும் தன்மை கொண்டவை. யூகலிப்டசில் உள்ள பல சிற்றின வகைகள், அதிகமாக மாறுபடும் பூகோள இருப்பிட நிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள் உள்ள பிரதேசங்களுக்கு ஏற்றவை. யூக்கலிப்டஸ், சுண்ணாம்புத்தன்மை கொண்ட நிலங்களைத் தவிர்த்து, பல்வேறு வகையான மண்ணிலும் வளரும் இயல்பு கொண்டது. அத்துடன் உவர்ப்புத் தன்மையால் பாதிக்கப்பட்ட நிலங்களிலும் கூட வளரும்.

சாகுபடி பரப்பளவு

யூக்கலிப்டஸ் இந்தியாவில் மிகவும் அதிக அளவு சாகுபடி செய்யப்படும் மரவகைகளில் ஒன்றாகும். 2009-ம் ஆண்டு கணக்கின்படி, சுமார் 40 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் யூக்கலிப்டஸ் சாகுபடி   செய்யப்படுகின்றது. விதையில்லா இனப்பெருக்க முறைகளில் ஒன்றான குளோனல் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நடுபொருட்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு, 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் யூக்கலிப்டஸ் சாகுபடி செய்யப்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் அதிவேகமான வளர்ச்சி ஆகியவை இவற்றின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இந்த சிறப்புகள்தான், இந்தியாவில் இவற்றை கூழ் மரங்களில் (Pulpwood) முக்கிய இடத்தைப் பெறச் செய்துள்ளன.

முக்கிய பயன்பாடுகள்

 யூக்கலிப்டஸ், கட்டைகளாகவும் , கம்பங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. நன்றாக விளைந்த மரங்கள் கட்டுமானப் பயன்பாட்டுக்கும், மரச்சாமான்கள் செய்யவும், பிளைவுட் எனப்படும் ஒட்டுப்பலகைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நன்றாக விளையாத அல்லது வைரம் பாயாத மரங்களை வெட்டும் போது, அவற்றில் பிளவு ஏற்படுதல் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. நிலத்தில் யூகலிப்டசின் ஆயுள் நீடித்திருக்க வேண்டுமெனில், அவற்றிற்கு பாதுகாப்புமுறை மிகவும் அவசியமான ஒன்று. இவற்றின் இலைகள் பாரம்பரிய மூலிகை மருந்தாகும். இந்த இலைகளில் இருந்து காய்ச்சப்படும் தைலம், தொண்டை கரகரப்பு, சளி, இருமல் மற்றும் பல நோய்த் தொற்றுகளுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. மூக்கு அடைப்பை நீக்கவும் இந்த தைலம் பயன்படுகிறது.

புதிய யூக்கலிப்டஸ் ரகங்கள்- மேம்பாடு மற்றும் வெளியீடு

   யூக்கலிப்டஸ் மரங்கள் வெகுவாக நடவு செய்வதற்கு முதலும் முதன்மையுமான காரணம், குளோனல் மரங்களின் நேர்த்தியான மற்றும் சமச்சீர் கொண்ட மர அமைப்பும் அவற்றின் உற்பத்தி திறனுமே ஆகும். மிகவும் கவனமான முறையிலான இனக்கலப்பு அல்லது தேர்வு மூலம் நிறைய ரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு உருவாக்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் ஆறுக்கும் குறைவான ரகங்கள் மட்டுமே நம் நாட்டில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

        இந்த கலப்பு ரகங்களை, காகிதத் தொழிற்சாலைகள், தனியார் நாற்றுப் பண்ணைகள் மற்றும் வனத்தோட்டக் கழகங்கள் தங்கள் சாகுபடி திட்டங்களுக்காகவும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கிலும், கடந்த 30 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகின்றன.

        தமிழ்நாட்டிலும், ஆந்திராவின் பல இடங்களிலும், யூக்கலிப்டஸ் மரத்தில் அதிக மகசூல் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னர், 2010-ம் ஆண்டில், IFGTB-EC-1, IFGTB-EC-2, IFGTB-EC-3, IFGTB-EC-4  ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.