An open source content management platform.
விதைகளை கையாளுதல்
மரங்களில் ஏறி விதைகளை சேகரிப்பதை விடவும், தரையில் விழுந்த பழங்களை சேகரிப்பது சிறந்தது. பழுத்த மஞ்சள் மற்றும் பழுப்பு நிற பழங்களையே சேகரிக்க வேண்டும். தனித்துள்ள மரங்களை தவிர்ப்பது நல்லது. சாக்குபைகளிலோ, மூங்கில் கூடைகளிலோ, விதைகளை எடுத்து வந்து புழுங்கச் செய்ய வேண்டும். நன்கு பழுத்த பழங்களை கைகளால் பிசைந்து மேல் தோலை நீக்கி ஓடும் நீரில் நன்கு அலசி நிழலில் உலர வைக்க வேண்டும்.
விதை சேமிப்பு
பத்து நாட்கள் உலர்ந்த விதைகளை தூய்மைப்படுத்தி கோணிப்பைகளிலோ டப்பாக்களிலோ இரண்டு ஆண்டுகள் வரை முளைப்புத் திறன் இழப்பு ஏற்படாமல் சேமித்து வைக்கலாம். புதிய விதைகளைக் காட்டிலும் ஓராண்டு பழைய விதைகள் கூடுதல் முளைப்புத் திறனைக் கொண்டுள்ளன. விதைகளில் பூச்சித் தாக்குதல் அறியப்படவில்லை. சதைப்பகுதி முழுவதுமாக நீக்கப்படாத விதைகள் பின்னர் பூஞ்சைத் தாக்குதலுக்கு இலக்காகும். இதனை கேப்டான் அல்லது பாவிஸ்டீன் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி நிர்வகிக்கலாம்.
விதை நேர்த்தி
மலைவேம்பில் குறைவான முளைப்புத்திறன் ஒரு பெரிய சவாலாகும். எமது நிறுவன ஆய்வுகளில் சுமார் 60% முளைப்புத்திறன் எவ்வித விதை நேர்த்தியும் இல்லாமல் எட்டப்பட்டுள்ளது. விதைப்புக்கு முன்பு விதைகளை நீரில் ஊற வைத்து மிதக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும்.
நாற்றங்கால்
விதைகளை மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நாற்றங்காலில் விதைக்கலாம். நன்கு உலர்ந்த விதைகளை மேட்டுப்பாத்திகளில் 5 செ.மீ இடைவெளியில் ஊன்றலாம். மண், தொழு உரம் ஆகியவற்றை 2:1 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். மணலில் இவ்விதைகள் முளைப்பதில்லை. ஒரு நாற்றங்கால் பாத்திக்கு 1500 எண்ணிக்கை இருக்கும்படி சுமார் 6-7 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம் நீர் தெளிக்க வேண்டும். விதைத்த 90 நாட்களில் முளைப்பு தொடங்கும். இவை மிகவும் மென்மையான செடிகள் என்பதால் நாற்றங்காலில் இருந்து பைகளுக்கு மாற்றி நடும் போது கூடுதல் கவனம் தேவை.
விதையில்லா இனப்பெருக்கம்
இளம் தண்டுகள் மற்றும் கவாத்து செய்யப்பட்ட துளிர்கள் விதையில்லா இனப்பெருக்கத்திற்கு மிகவும் ஏற்றவை. 1000-2000 பி.பி.எம். அடர்வுள்ள ஐ.பி.ஏ. கரைசல் இதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. முதிர்ந்த மரங்களின் தளிர்கள் நன்கு வேர்விடும் ஆற்றலைக் கொண்டுள்ளன. பென்சில் தடிமன் உள்ள தண்டுப்பகுதிகள் இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. மணலில் பதியப்பட்ட குச்சிகளுக்கு தினம் இருமுறை நீர் தெளிக்க வேண்டும். நல்ல வடிகால் வசதி இல்லாவிடில் அழுகல் ஏற்படும். கோடை காலம் வேர்விட சற்று தாமதம் ஆகும். சுமார் 75% வேர்விடல் காணப்படுகிறது.