நடவு

மண் மற்றும் காலநிலை

பல்வேறு மண் வகைகளில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் 36 அடி ஆழம் உடைய வளமான வடிகால் வசதி மிக்க மண் நல்ல பலனைத் தரும். புளி நன்கு வளர 25˚     செல்சியஸ் முதல் 40˚     செல்சியஸ் வரை வெப்பநிலை உகந்தது. மழையளவு ஆண்டிற்கு 500 - 700 மி.மீ வரை இருக்க வேண்டும்.

நிலம் தயார் செய்தல்

நிலத்தை நன்கு உழுது தயார் செய்ய வேண்டும். புளி நடுவதற்கு நல்ல ஆழம் உள்ள நிலங்களை தேர்வு செய்ய வேண்டும். பாறை மற்றும் கற்கள் உடைய நிலங்களை தவிர்த்தல் வேண்டும்

இரகங்கள்

வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் வட இந்தியாவில் கள ஆய்வு மேற்கொண்டு சிறந்த தாய் மரங்களை தேர்வு செய்து, அவற்றை இணைவு மற்றும் பிளவு ஒட்டு மூலம் இனவிருத்தி செய்து, தாய் மர தோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உயர் விளைச்சல் தரக் கூடிய தேர்வு செய்யப்பட்ட புளி வகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வனத்துறையால் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட PKM–1 மற்றும் உரிகம் ரகங்கள் விவசாயிகளிடையே வரவேற்பு பெற்றவை. மூன்று அல்லது நான்கு ரகங்களை கலந்து கலப்பின தோட்டம் உருவாக்குவதன் மூலம் சிறந்த மகசூலை பெற இயலும்.

இனிப்புப் புளி பொதுவாக தாய்லாந்து நாட்டில் மட்டுமே பயிரிடப்பட்டு வணிக நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மரபு வேறுபாடுகள் காரணமாக இப்புளி ஆங்காங்கே பரவியுள்ளது. வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 60 வகை சிகப்புப் புளி மற்றும் 30 வகை இனிப்புப் புளி வகைகளை தேர்வு செய்து அதனை பக்க ஒட்டு முறை மூலம் பயிர்ப் பெருக்கம் செய்து மரபுப் பூங்கா அமைத்து பாதுகாத்து வருகிறது.

பருவம்

ஜுலை முதல் டிசம்பர் வரை ஒட்டுக் கன்றுகளை மழைக்கு முன்போ அல்லது பின்போ நடவேண்டும். நெருக்கு ஒட்டு, குருத்து ஒட்டு, மென் தண்டு ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 6 முதல் 12 மாத வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

இடைவெளி

புளியை நடும் பொழுது வரிசைக்கு வரிசை 6 மீட்டரும் செடிக்குச் செடி 6 மீட்டரும் இடைவெளி விட்டு நட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 160 ஒட்டுக் கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். ஒரு கன மீட்டர் அளவுள்ள குழிகளைச் செடி நடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எடுத்து ஆறவிட வேண்டும். குழியில் பாதி அளவிற்கு மேல் மண், 10 கிலோ தொழு உரம், 50 கிராம் லின்டேன் கலந்து நிரப்ப வேண்டும். குழியின் நடுவே ஒட்டுக் கன்றுகளை நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.