An open source content management platform.
நீர் நிர்வாகம்
செடிகள் நட்ட உடனேயும், மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். புளி நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி மரங்களை சிறிது கடினப்படுத்துவதன் மூலம் நன்றாக பூக்க வைக்க இயலும். புளியின் பிஞ்சுகள் வளரும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுவதன் மூலம் பிஞ்சு உதிர்வது தவிர்க்கப்பட்டு விளைச்சல் அதிகரிக்க இயலும்.
உர மேலாண்மை
இளம் கன்றுகளுக்கு உரங்களை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து 60 செ.மீ. தூரத்திலும் வளர்ந்த காய்க்கும் மரங்களுக்கு 160 செ.மீ. 15-20 செ.மீ. ஆழத்திலும் வட்டக் குழிகள் தோண்டி அவற்றில் இட்டு மேல் மண் கொண்டு மூட வேண்டும். மரத்தின் கிளைகள் படர்ந்துள்ள தூரத்தில் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்ட வேர்கள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் உரங்களை இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் மொத்தமாக ஒரே தவணையில் இடுவதற்கு பதில் பிரித்து அளிப்பதன் மூலம் சிறந்த பலனை அடைய இயலும்.
கவாத்து செய்தல்
சிறிய மரத்தில் ஒட்டுக்கு கீழ் உள்ள வேர் குச்சியிலிருந்து தோன்றும் பக்க கிளைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். பொதுவாக புளியில் கவாத்து செய்யப்படுவது இல்லை. எனினும், தேவையற்ற உட்புறக் கிளைகளையும், நோயுற்ற மற்றும் காய்ந்த கிளைகளையும் வெட்டி விட வேண்டும். இதனால் மரத்தின் மேல் பகுதிக்கு சூரிய ஒளியும் காற்றும் நிறைய கிடைக்கும். கவாத்து செய்தவுடன் உரமிட்டு நீர்ப்பாய்ச்சுதல் நல்லது. கவாத்து செய்யும் போது வெட்டுப்படும் பகுதியில் சாணம் அல்லது பூஞ்சாணக் கொல்லியை தடவி விடுவது அவசியம்.
புளியில் வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்
நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியே கொடுப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்துவதோடு பழங்களின் சதைப் பற்றை அதிகப்படுத்த முடியும். மார்ச் முதல் வாரத்தில் பொட்டாசியம் நைட்ரேட் 2% கரைசலை இலை வழியாகவோ அல்லது கல்டார். 3000 பிபிஎம் கரைசலை வேர் வழியாக அளிப்பதால் மரத்தின் பூக்கும் தன்மையை அதிகப்படுத்தலாம். பூக்கும் தருணத்தில் N.A.A என்ற வளர்ச்சி ஊக்கியை லிட்டருக்கு 20 மி.கிராம் என்ற அளவில் (2 விழுக்காடு) கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் மலர்கள் உதிர்வது தடைபட்டு காய் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.