அறிமுகம்

புளி பல நூறு ஆண்டுகளாக நமது நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. வெப்ப மண்டல சமவெளி பகுதிகளில் விளையும் பழப் பயிர்களில் புளி மிக முக்கியமான பயிர். புளியின் தாயகம் தெற்கு ஆப்பிரிக்கா. உலக அளவில் இந்தியாவில் அதிகம் பயிரிடப்பட்டு வணிக ரீதியில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் சுமார் 82,000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர், பீகார், ஒரிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

அமிலத் தன்மையை பொருத்து புளிப்பு புளி மற்றும் இனிப்பு புளி என வகைப்படுத்தலாம். புளிப்பு புளியில் அமிலத்தன்மை அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் இருக்கும். இனிப்பு புளியின் சர்க்கரை அளவு அதிகமாகவும் மற்றும் அமிலத்தன்மை குறைவாகவும் காணப்படும்.

புளி பல்வேறு பயன்களை அளிக்கும் மரம். இது பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரும் தன்மையுடையது. இயற்கையாகவே புளியில் பல்வேறு வகைகள் உள்ளன. புளியம் பழத்தில் உள்ள சதைப் பற்றின் நிறத்தைப் பொருத்து சிகப்புப் புளி மற்றும் பச்சை புளி என்றும் வகைப்படுத்தலாம்.

சிகப்புப் புளியில் உள்ள ஆந்தோசயனின் என்ற இயற்கை நிறமி சாயத் தொழிற்சாலைகளிலும், உணவுப் பதப்படுத்தும் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு புளி அதிக வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களை கொண்டுள்ளதால் பழக்கூழ் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.