அறிமுகம்

பெருமரம் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். பீயன் மரம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இம்மரம் தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டிருக்கிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ராஜஸ்தான், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் வரையுள்ள பகுதிகளிலும் ஆண்டுச் சாரசரி மழைப்பொழிவு 500-1900 மி.மீ. இருக்கும் பகுதிகளிலும் இயல்பாக வளருகிறது. வெப்பநிலை 4o C முதல் 47o C செல்சியஸ் வரையுள்ள பகுதிகளுக்கும் ஏற்ற மர வகையாகும். இதன் வளர் இயல்பு காரணமாக இது சொர்க்கத்தின் மரம்" என அழைக்கப்படுகிறது.

இது தீக்குச்சிகள் மற்றும் தீப்பெட்டிகள் செய்வதற்கு மிகவும் ஏற்றது. எழுது பலகை, பென்சில், மரப்பொம்மைகள், மலிவான கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுப் பலகை, தயாரிப்பிலும் பயன்படுகிறது. மீன் பிடி படகுகள், பெட்டிகள் போன்றவை தயாரிக்கவும், மரக்கூழ் உற்பத்திப் பொருளாகவும் பயன்படுகிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டுப் பலகை தயாரிப்பில் இம்மரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. பல்வேறு மருத்துவப் பொருட்கள் தயாரிக்கவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. பல்வேறு வகையான மண் வகையிலும் வளரக் கூடியது. ஆனாலும், நீர் தேங்கும் இடங்களிலும் களிமண்ணிலும் நன்கு வளர்வது இல்லை. மிகவும் வறண்ட பகுதிகளில் வளர்ந்தாலும் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும். அதிக மழைப்பொழிவுள்ள ஈரப்பத சூழ்நிலையில் இது சாகுபடிக்கு உகந்தது அல்ல.