நாற்றங்கால் நோய்கள்

1.கழுத்து நுனி அழுகல் நோய் (Collar Rot Disease)

நோய் விளக்கம்

வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு, ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், மலைவேம்பு, வேம்பு, கடம்பம், சந்தனம், தேக்கு முதலிய பயிர்களின் நாற்றங்கால், நாற்று இனப்பெருக்க கூடம் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படும் முக்கிய நோய் ஆகும்.

 

நோய் உண்டாக காரணங்கள்

அதிக அளவு மண்ணில் வெப்பம், போதிய அளவு தண்ணீர் கிடைக்காமை, இடமாற்றம் செய்யும் போது ஏற்படும் காயங்கள் ஆகியன. ஏப்ரல்-ஜுன் மாதங்களில் தோன்றும்.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு, யூகலிப்டஸ் (தைலமரம்), குமிழ், வேம்பு, மலைவேம்பு, சந்தனம், கடம்பு, தேக்கு முதலியன.

 

நோய் உண்டாக்கும் கிருமிகள்

மண் மற்றும் வேர்களில் தோன்றும் பூஞ்சைகளான பியூசேரியம், லேசியோடிப் புளோடியா, ரைசோக்டோனியா, ஸ்கெலரோட்டியம் மற்றும் பாக்டீரியாக்களான சூடோமானஸ் ஆகியவை. லேசியோபிபுளோடியா தியோபுரோமே சவுக்கில் ஏற்படுத்தும் நோய் தாக்கத்தை முதன்முதலாக வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் கண்டறிந்து அறிவித்துள்ளது.

 

நோய் அறிகுறிகள்

  1. இலை வறட்சி, கிளைகள் மற்றும் தண்டுப்பகுதி வறட்சி.
  2. கழுத்துப் பகுதியில் சிறிய கருப்புநிற படலம் உருவாதல்.
  3. நோய் முற்றிய நிலையில் ஙெ்டிகள் இறந்து காணப்படும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதார பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள், பூஞ்சாணக்கொல்லி ஆகிய ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் கட்டுப்படுத்தலாம். கோடையில் பாதுகாப்பான நீர்ப்பாசனம் மற்றும் மாதமிருமுறை பாவிஸ்டின் அல்லது டைத்தேன் M45 (0.1% ஏ.ஐ.)  கரைசலை மண்ணில் ஊற்றலாம். அதன்பின் இருவாரம் கழித்து உயிரிகட்டுப்பாட்டு முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம். சுடோமோனஸ் புளோரசன்ஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி உபயோகிப்பது கூடுதல் பலன் தரும்.

2.நீர்ப்பெருக்க நோய் (Damping Off Disease)

நோய் விளக்கம்

பல்வேறு நாற்றங்கால் நோய்களில், ஈர அழுகல் நோயானது மிகவும் பரவலாகக் காணப்படுவதோடு, அதிக சேதாரத்தையும் ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இது பல நோய்களின் தொகுப்பை குறிக்கக் கூடியது. இதனை முளைப்புக்கு முந்திய ஈர அழுகல் நோய் மற்றும் முளைப்புக்கு பிந்திய ஈர அழுகல் நோய் என நோய் தாக்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தலாம். இந்த நோய் ஏற்பட பித்தியம், பைட்டோப்தோரா, பியூசேரியம் மற்றும் ரைசோக்டோனியா போன்ற பூஞ்சைகள் காரணமாக உள்ளன. இவற்றில் கடைசியாக குறிப்பிடப்பட்ட பூஞ்சைகள் நம் நாட்டின் வன நாற்றங்கால்களில் பரவலாக காணப்படுகின்றன.

 

நோய் உண்டாக காரணங்கள்

இந்த நோய் எற்படுவதை முன் கூட்டியே தீர்மானிக்கும் காரணிகளாக அதிக மண் வெப்பம், அதிக மண் ஈரப்பதம், அதிக மண் காரத் தன்மை, அதிக நைட்ரஜன் அளவு, குறைந்த ஒளி, வடிகால் வசதி குறைந்த களிமண், மற்றும் அடர்த்தியான விதை நடவு ஆகியவற்றை குறிப்பிடலாம். அடர்த்தியான நிழல் மற்றும் அளவுக்கு அதிகமான நீர்தெளிப்பு ஆகியன நோய் வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேம்பு, வேல், வாகை, சவுக்கு, தைலம், குமிழ், மலைவேம்பு, கடம்பம், புளி, சந்தனம், பெருமரம் மற்றும் மூங்கில் முதலியன.

 

நோய் உண்டாக்கும் கிருமிகள்

        பித்தியம், பைட்டோப்தோரா, பியூசேரியம் மற்றும் ரைசோக்டோனியா

நோய் அறிகுறிகள்

  1. குறைவான விதை முளைப்பு விகிதம்
  2. முளைத்த பின் செடி வாடல் மற்றும் விழுந்து விடல்.
  3. விதை முளைத்த இரு வாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றும். முதல் ஜோடி இலைகள் தோன்றுகையில் 60% இறப்பு ஏற்படும்.
  4. நாற்றங்கால் பாத்திகளில், இந்த நோய் ஒழுங்கற்ற வகையில் பகுதி, பகுதியாக தோன்றும், பின் வேகமாக பக்கவாட்டில் பரவும்.
  5. நீர் தேங்கி, தரை மட்டத்தில் அழுகத் தொடங்கும். பாதிக்கப்பட்ட பகுதி பழுப்பு நிறத்திற்கு மாறி செல் பகுதிகள் சேதமடைவதால் நிலைகுலைந்து விழுந்து இறந்து விடும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

(அ)     நோய்க் கிருமிகள் வளர்ச்சியை தடுப்பதோடு, பயிர்ச் செடி வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் சாகுபடி முறைகளை கையாளுதல்.

(ஆ)     பார்மலின் மற்றும் பொருத்தமான பூஞ்சைக் கொல்லிகளை மண்ணில் கலந்தோ, கரைத்து ஊற்றியோ பயன்படுத்தலாம். பாவிஸ்டின் பூஞ்சைக் கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்வதுபயன் தரும்.

இ)      நாற்று வளரும் ஊடகத்தை நல்ல வெயிலில் உலர்த்தி, பயன்படுத்த வேண்டும்.

ஈ)      நாற்றங்கால் பாத்திகளில் நீர் தேங்காமலும், அதிக அளவு நீர் தெளிக்காமலும் பராமரிக்க வேண்டும்.

உ)      நாற்றங்காலில் நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஊ)     நாற்றங்காலில் நல்ல காற்றோட்டம், மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி உறுதி செய்ய வேண்டும்.

எ)     டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் வேம் மற்றும் எக்டோமைச்கோரைசல் உயிரி கலவைகளையும், உயிரி கட்டுப்பாடு முறைகளையும் பயன்படுத்தி, செடி வளர்க்கும் கலவையை தயாரித்து, பிறகு விதைகளை ஊன்றலாம்.

 

3.இலைக் கருகல் நோய்  (Leaf Blight Disease)

நோய் விளக்கம்

இது மர வகைப்பயிர்களின் நாற்றங்கால்கள், இனப்பெருக்க கூடாரம், விதை தோட்டங்கள் மற்றும் குளோனல் விதைத் தோட்டங்களில் காணப்படும் முக்கிய நோய் ஆகும். பொதுவாக பல்வேறு மரப்பயிர்களில் இந்நோய் உண்டாகிறது.

 

நோயால் பாதிக்கப்படும்  மர வகைகள்

மூங்கில், குமிழ், வேம்பு, தைலம், தேக்கு, புங்கம், சந்தனம், செஞ்சந்தனம் போன்ற பல்வேறு வகையான மரப்பயிர்களைத் தாக்கும்.

 

நோய் அறிகுறிகள்

  1. இலை நுனிகளில் நீர் கோர்த்து காணப்படும். பின்  இலை முழுவதும் பரவி, பச்சை நிறம் முற்றிலும் மறைந்து விடும்.
  2. தாக்குதலுக்கு உள்ளான செடிகள், சாம்பல் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, பெரிதாகி பரவும்.
  3. இலைகள் கருகி காணப்படும்.
  4. நோய்குறி தென்பட்டவுடன், விரைவில் பரவி, நாற்றங்கால் முழுவதும் இழப்பு ஏற்படுத்திவிடும்.
  5. இலை நுனி முதலில் கருகி காணப்படும். பின்னர் வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவும்.
  6. தாக்குதலுக்கு இலக்கான இலைப் பகுதிகளில் துளைகள் காணப்படும்.
  7. கருகிய இலைகள் வறண்டு உதிர்ந்து விடும்.
  8. அருகில் உள்ள இலைகள் மூலம் மற்ற செடிகளுக்கு பரவும்.
  9. நோய் வீரியத்துக்கு ஏற்றவாறு இலை உதிர்வு காணப்படும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அ)தகுந்த சாகுபடி முறைகளை மேற்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

ஆ)நோய் தாக்கிய செடிகளை தனிமைப்படுத்தி பிற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம்.

இ)பாவிஸ்டின், பிளிடாக்ஸ், கேப்டாப், டைத்தேன் M.45, மேன்கோசெப் போன்ற பூஞ்சைக் கொல்லிகளை மாதம் இருமுறை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

4. இலைத்துருநோய்

நோய் விளக்கம்

இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மர இனங்களின் நாற்றங்கால்கள் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படுகிறது.

 

நோய் உண்டாகக் காரணங்கள்

பொதுவாக வழக்கமான பருவ மழைக்கு பின்பும், முறையாக பராமரிக்கப்படாத நாற்றங்கால்களிலும் ஏற்படும்.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வாகை, சிசு, புங்கம், பாப்லார், தேக்கு, கடுக்காய் போன்ற மரச்செடிகளில் தாக்கும்.

 

நோயை உண்டாக்கும் கிருமிகள்

வாகையில் இந்நோயை ரேவனேலியா கிலிமென்சியே என்ற நுண்ணுயிரும், புங்கையில் ரேவனேலியா கோப்சோனி மற்றும் ரேவனேலியா ஸ்டிக்டிகா என்ற நுண்ணுயிர்களும் நோய் உண்டாக்குகின்றன. தேக்கில் ஒலிவியா டெக்டோனே கிருமியும், சிசுவில் மரவலியா அச்சோரா கிருமியும், கடுக்காயில் உரேடோ டெர்மினேலியே கிருமியும் நோய் உண்டாக்குகின்றன.

 

நோய் அறிகுறிகள்

  1. பாதிக்கப்பட்ட இலைகளில் மஞ்சள் பழுப்புநிற பூஞ்சை படலம் பரவி காணப்படும். இலை மேற்பரப்பில் சாம்பல் நிறம் காணலாகும். பாதிக்கப்பட்ட இலைகள் முழு வளர்ச்சியடையாமலேயே உதிர்ந்து விடுகின்றன. தேக்கில் அக்டோபர் - பிப்ரவரி மாதங்களில் இந்நோய் காணப்படுகிறது.
  2. சிசுவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இலைகளில் தாக்கம் ஏற்படுத்தும். பருவமழை பெய்தபின் நோய்த் தாக்குதல் குறையும். பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சி குன்றியும், வடிவம் மாறியும் இருக்கும்.
  3. கடுக்காய் இலைகளை நவம்பர் மாதத்தில் இந்நோய் தாக்குகிறது. அதிக நோய்த் தாக்கம் ஜனவரியில் இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகளின் அடிப்பகுதியில் கிருமிப்படலம் மஞ்சள் பழுப்பில் காணப்படும். முழு வளர்ச்சி அடையாமலே இலைகள் உதிர்ந்து விடுகின்றன.

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதார முறைகள் சரியான பராமரிப்பு மற்றும் 0.08% பேலிட்டன் கரையை இருவார இடைவெளியில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

ஆரம்ப தாக்குதல் காணப்பட்டதும் இலைகளை நறுக்கி, அப்புறப்படுத்தலாம். கந்தகம் கலந்த பூஞ்சைக்கொல்லி (சல்பாக்ஸ் 0.05% அளவில்) தெளித்தும், மண்ணில் கரைத்து ஊற்றியும் கட்டுப்படுத்தலாம். பூஞ்சைக்கொல்லி பயன்படுத்தி ஒரு மாதம் கழித்து உயிரி கட்டுப்பாட்டு முறைகளான சூடோமோனஸ் புளோரசன்ஸ், டிரைகோ டெர்மா விரிடி பயன்படுத்தியும் நோயை கட்டுப்படுத்தலாம்.

 

5.இலைப்புள்ளி நோய்  (Leaf Spot Disease)

நோய் விளக்கம்

இது பல்வேறு மரப்பயிர்களின் குளோனல் விதைப் பண்ணைகள், மரப்பயிர்களின் இனப்பெருக்க கூடாரம் மற்றும் நாற்றங்கால்களில் காணப்படும் முக்கியமான நோய் ஆகும். வாகை, வேல், மூங்கில், சவுக்கு, ஈட்டி, தைலம், குமிழ், மலைவேம்பு, வேம்பு, கடம்பு, வேங்கை, சந்தனம், தேக்கு போன்ற பலவகை மரப்பயிர்களில் இது காணப்படுகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

இலைப்புள்ளி நோய் உண்டாக்கும் நோய்க்கிருமிகள் காணப்பட்டு, மிகவும் வேகமாக அதிக இலைப் பரப்பில் தாக்குதலை உண்டாக்கும். இலைகள் கருகி காணப்படும். பின்னர் உதிர்ந்து விடும். தீவிர தாக்குதலுக்கு ஆளான செடிகளில் முன் கூட்டியே இலைகள் உதிர்ந்து விடும்.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேல், வாகை, மூங்கில், சவுக்கு, ஈட்டி, தைலம், குமிழ், மலைவேம்பு, புங்கம், ஆல மரம், வேம்பு, கடம்பம், சந்தனம், மகாகனி, தேக்கு போன்றவற்றை தாக்கக் கூடும்.

 

நோய் உண்டாக்கும் கிருமிகள்

ஆல்டர்னேரியா, செர்கோஸ்போரா, கொலடாட்ரிகம், கர்வுலேரியா, சிலிண்ரோகிளேடியம், பியூசேரியம், மேக்ரோபோமினா, போமா, போமோப்சிஸ், பெஸ்டலோடியோப்சிஸ், பைலோகோரா, பைலோஸ்டிகா போன்ற பல்வேறு பூஞ்சைகளும், சேந்தோமோனாஸ் சுடோமோனஸ் போன்ற பாக்டீரியாக்களும்  பல்வேறு மரவகைப் பயிர்களில் இலைப்புள்ளி நோயை உண்டாக்குகின்றன.

நோய் அறிகுறிகள்

  1. பாதிப்புக்குள்ளான இலைகளில் பல்வேறு நிறங்களில் புள்ளிகள் தோன்றி, வட்டமாக, ஒழுங்கற்ற வடிவங்களிலும் பரவி காணப்படும்.
  2. தாக்கும் கிருமிகளுக்கேற்ப புள்ளிகளின் நிறம் மாறுபடும்.
  3. தாக்கப்பட்ட பகுதி சாம்பல், பழுப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் அடர் பழுப்பு நிறங்களில் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் காணப்படும்.
  4. நோய்க் கிருமிகள் இலைகளின் அடிப்பரப்பில் சிறு சிதிலாக்கத்தை உருவாக்குவதும் சில மரப்பயிர்களில் காணலாம்.
  5. அதிக பாதிப்புக்குள்ளாகும் இலைகள் கருகி உதிர்ந்துவிடும்.
  6. திசு அழுகல் எற்பட்டு இலைகள் உதிர்வதும் எற்படும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அ)     தக்க சாகுபடி முறைகளை கையாள வேண்டும்.

ஆ)     நோய் தாக்கிய செடிகளை தனிமைப்படுத்தி பிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

இ)      பிளிடாக்ஸ், கேப்டாப், டைதேன் M-45, மேன்கோசெப் போன்ற ஏதாவது ஒரு  பூஞ்சைக் கொல்லியை மாதம் இருமுறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

 

6. இலை வலைக் கருகல் நோய்  (Leaf web blight disease)

நோய் விளக்கம்

இந்நோயானது வாகை, தைலம், குமிழ், மலைவேம்பு, வேம்பு ஆகிய மரப்பயிர்களின் நாற்றங்கால்களிலும், நாற்று இனப்பெருக்க கூடங்களிலும் காணப்படுகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

வழக்கமான பருவ மழைக்கு பின்பும், நன்கு பராமரிக்கப்படாத நாற்றங்கால்களிலும் இந்நோய் வர வாய்ப்பு அதிகம்.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வாகை, ஈட்டி, தைலம், குமிழ், வேம்பு, மலைவேம்பு ஆகியவை இந்நோய்க்கு இலக்காகக் கூடும்.

நோயை உண்டாக்கும் கிருமிகள்

ரைசோக்டோனியா சொலானி என்னும் நோய்க் கிருமியால் இது ஏற்படுகிறது.

 

நோய் அறிகுறிகள்

  1. தரைப் பகுதிக்கு அருகில் உள்ள இலைகளில் முதலில் தோன்றுகிறது.
  2. சாம்பல் கலந்த பழுப்பு நிற திட்டுகள் இலை ஓரங்களில் காணப்படும். பிறகு அதன் வடிவ அளவு அதிகரித்து செல்லும்.
  3. பாதிக்கப்பட்ட பூசண இலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வலைப்பின்னல் போல உருவாகிறது.
  4. பிறகு அவை செடியில் இருந்து உதிர்ந்து விடுகின்றன.
  5. இலைகள் அடுக்கடுக்காய் உரசுவதால் இந்நோய் பரவ ஏதுவாகிறது.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

இந்நோயை சுகாதார முறைகள், சரியான பராமரிப்பு மற்றும் பூஞ்சைக் கொல்லி தெளிப்பு ஆகிய ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் கட்டுப்படுத்தலாம்.

(அ)     இலைக்குப்பைகளை உடனுக்குடன் அகற்றியும் நோய் தாக்கிய செடிகளை எரித்தும் நோயை பரவாமல் தடுக்கலாம்.

(ஆ)     நாற்றுகளை பாத்திகளில் வளர்ப்பதற்கு பதிலாக பாலித்தீன் பைகளில் வளர்க்கலாம். செடிகளை 200-300 என்ற அளவில் தொகுதிகளாக பிரித்து வைக்கலாம்.

(இ)     பேலிட்டான் (0.1%) என்ற பூஞ்சாண கொல்லியை பயன்படுத்தலாம்.

 

7. சாம்பல் (அ) வெண்படல நோய்  (Powdery Mildew Disease)

நோய் விளக்கம்

முக்கிய மர இனங்களான வேல், வாகை, மூங்கில், ஈட்டி, தைலம், குமிழ்,வேம்பு, புளி, மலைவேம்பு, கடம்பம், சந்தனம், தேக்கு ஆகியவற்றின் நாற்றங்கால், இனப்பெருக்க கூடம் மற்றும் விதைத் தோட்டங்களில் காணப்படும் நோய் ஆகும்.

 

நோய் உண்டாக காரணங்கள்

குளிர் காலத்திலும், முறையற்ற நாற்றங்கால் பராமரிப்பு காரணமாகவும் தோன்றும்.

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேல், வாகை, மூங்கில், ஈட்டி, தைலம், குமிழ், மலைவேம்பு, கடம்பு, சிசு, சந்தனம், புளி  மற்றும் தேக்கு முதலியன.

நோய் உண்டாக்கும் கிருமிகள்

        வேம்பில் ஓய்டியம் அசாடிரேக்டே, குமிழில் பைலாக்டீனியம் சபல்டா மற்றும் எரிசிபேரியே குடும்ப உயிரிகள், தேக்கிலும் சாம்பல் படல நோயை உண்டாக்குகின்றன. பைலக்டேனியா டால்பர்ஜியே கிருமியால் ஈட்டியில் நோய் ஏற்படுகிறது.

 

நோய் அறிகுறிகள்

  1. இலைகளில் வெண்மையான திட்டுகள் தோன்றும். பிறகு முழுவதும் பரவி சாம்பல் படலமாக காணப்படும்.
  2. நோய் முற்றிய நிலையில், இலைகளும், குருத்துகளும் முழு வளர்ச்சியடையாமல் விழுந்து விடுகின்றன.
  3. குமிழில் இலை அடிப்பகுதியில் புள்ளிகள் தோன்றி, அதன் மேல்புறம் பழுப்பு மஞ்சள் நிறம் காணப்படும்.
  4. சிசுவில் இப்பூஞ்சையானது மஞ்சள் நிற இழைகளை இலை அடிப்பகுதியில் தோற்றுவிக்கும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதார பராமரிப்பு முறைகள், தக்க வளர்ப்பு முறைகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் மூலம் ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தலாம். பாவிஸ்டின் (0.01%) கரைசலை இலைகளில் தெளித்து தேக்கில் கந்தக தூளை தூவியும் பிறகு பேகார், மார்பின் மற்றும் கேலிக்சின் பூஞ்சைக் கொல்லி உபயோகித்து சிசு செடியில் நோயை கட்டுப்படுத்தலாம்.

 

8. வேர் அழுகல் நோய் (Root Rot Disease)

நோய் விளக்கம்

வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு, ஈட்டி, தைலம், குமிழ், மலைவேம்பு, வேம்பு, கடம்பம், சந்தனம், தேக்கு ஆகியவற்றின் நாற்றங்கால், இனப்பெருக்க கூடம், விதைத் தோட்டங்களில் உண்டாகும் நோயாகும்.

நோய் உண்டாக காரணங்கள்

அதிக அளவு நீர் தேங்கி நிற்றல், இடம் மாற்றி வைக்கும் போது வேர்களில் ஏற்படும் காயங்கள், களைகள் அதிகம் இருப்பது ஆகியன.

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு, ஈட்டி, தைலம், குமிழ், செஞ்சந்தனம், மலைவேம்பு, பூவரசு, வேம்பு, கடம்பம், சந்தனம், தேக்கு, வில்வம், பெருமரம் ஆகியன.

நோய் உண்டாக்கும் கிருமிகள்

மண் மற்றும் வேர்ப் பூஞ்சைகளான பியூசேரியம், ரைசோக்டோனியா, ஸ்கிலரோட்டியம் மற்றும் சுடோமோனஸ் சொலனேசியாரம் போன்ற பாக்டீரியாக்களும் நோய் உருவாக்குவன ஆகும். 

நோய் அறிகுறிகள்

  1. இலைகள் பழுத்து தோன்றுவதும், இலை உதிர்வதும், தொடர்ந்து செடிகள் இறந்து விடும்.
  2. முழு வளர்ச்சியடையும் முன்பே இலைகள் உதிர்வது.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதார பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள், பூஞ்சைக் கொல்லி உபயோகம் ஆகிய ஒருங்கிணைந்த அணுகுமுறையில் கட்டுப்படுத்தலாம். அதிக அளவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விதை நடவுக்கு முன்பு, மண் கலவையை நன்கு கிருமி நீக்கம் செய்ய, சுரிய ஒளியில் கிடத்த வேண்டும். பாவிஸ்டின் (0.2%) கரைசலை மாதம்தோறும் மண்ணில் ஊற்றியும் இருவாரம் அல்லது மாதம் ஒருமுறை பூஞ்சாணக்கொல்லி தெளித்தும், பிறகு உயிரி கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தலாம்.

9. தண்டு கருகல் நோய்  (Seedling blight disease)

நோய் விளக்கம்

வேலமரம், வாகை, மூங்கில், ஈட்டி, தைலம், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம் மற்றும் தேக்கு பயிர்களில் நாற்றங்கால் இனப்பெருக்க கூடம் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படுகிறது.

நோய் உண்டாக காரணங்கள்

அதிக மழைக்குப்பின் காணப்படும் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையானது நாற்றங்கால் மற்றும் தோப்புகளில் நோய் தோன்ற காரணமாகிறது.

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேலமரம், வாகை, மூங்கில், சவுக்கு. ஈட்டி, தைலம், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், வேங்கை, ந்தனம், மகாகனி, தேக்கு முதலியன.

நோயை உண்டாக்கும் கிருமிகள்

பல்வேறு பூஞ்சாணங்களான, ஆல்டர்னேரியா, செர்கோஸ்போரா, கொலட்ரோடிரைகம், கர்வுலேரியா, சிலிண்ரோகிளேடியம், பியூசேரியம், மைக்ரோபோபினா, போமா, போமோப்சிஸ், பைலசோரா, பைலோஸ்டிகா அத்துடன் சேந்தோமோனஸ் மற்றும் சூடோமோனஸ் ஆகியனவும் இந்த நோயை உண்டாக்குகின்றன.

நோய் அறிகுறிகள்

  1. பாதிக்கப்பட்ட இலைகள் அதிக அளவில் கருகிய நிலையில் காணப்படும்.
  2. முழு வளர்ச்சி அடையும் முன்பே இலை உதிர்ந்து இருக்கும்.
  3. அங்கங்கு திட்டுகளாக முதலில் தோன்றி, பிறகு பரவ ஆரம்பிக்கும்.
  4. பாதிப்புற்ற செடிகளின் இலைகள் மற்றும் குருத்துகள் கருகி விரைவில் அதிக சேதாரத்தை உண்டாக்கும்.
  5. நோய் தாக்கிய பின் வறண்டுசெடிகள் விழுந்து விடும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அ)      செடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, நோய்க்கிருமி வளர்ச்சியை மட்டுப்படுத்தும்படி தக்க சாகுபடி முறைகள் கையாளுதல்.

ஆ)     நோய் தாக்கிய செடிகளை தனிமைப்படுத்துதல்.

இ)      பாவிஸ்டின், பிலிடாக்ஸ், கேப்டாப், டைத்தேன் M45, மேன்கோசெப் போன்ற பூஞ்சை கொல்லிகளை இருவார இடைவெளியில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

10.செடி வாடல் நோய்  (Seeding Wilt Disease)

நோய் விளக்கம்

வேலமரம், வாகை, மூங்கில், ஈட்டி, யூகலிப்டஸ், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம் மற்றும் தேக்குபயிர்களில் நாற்றங்கால், இனப்பெருக்க கூடம் மற்றும் இளம் தோப்புகளில் காணப்படுகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

முறையற்ற நாற்றங்கால் பராமரிப்பு

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வாகை, மூங்கில், ஈட்டி, தைலம், குமிழ், வேம்பு, மலைவேம்பு, கடம்பம், சந்தனம் மற்றும் தேக்கு ஆகியன.

 

நோயை உண்டாக்கும் கிருமிகள்

மண் மற்றும் வேர்ப்பூஞ்சாணங்களான பியூசேரியம், பைட்டோப்தோரா, ரைசோக்டோனியா, ஸ்கிலரோடியம் மற்றும் சுடோமோஸ் சோலனேசியரம் போன்ற பாக்டீரியாக்களும் நோய் எற்படுத்துகின்றன.

 

நோய் அறிகுறிகள்

  1. கீழ்ப்பகுதி இலைகள் ஆரம்பத்தில் மஞ்சள் நிறமாக மாறி, உதிர்ந்து விடுகின்றன.
  2. பிறகு மஞ்சள் நிறம் வளர்ச்சியுறும் நுனிகளுக்குப் பரவி, ஒரு மாதத்திலே செடிகள் இறந்து விடும்.
  3. பாதிப்புற்ற செடிகளின் வேர்கள் நிறம் மாறி விடுகின்றன.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

சுகாதாரப் பராமரிப்பு, தக்க சாகுபடி முறைகள் மற்றும் டைத்தேன்  M45 (0.3%) அல்லது பாவிஸ்டின் (0.2%) கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். செடிப்பாத்திகளையும் 0.2% பாவிஸ்டின் கரைசலை நடவுக்கு முன் நேர்த்தி செய்தும் தடுக்கலாம்.