தோப்பு நோய்கள்

1. பாக்டீரியா வாடல் நோய்  (Bacterial Wilt Disease)

நோய் விளக்கம்

வாடல் நோய் செடி முழுமையும் பாதிக்கும் நோயாகும். ஒரு பகுதியாகவோ, செடி  முழுவதுமாகவோ வாடிவிடும்.

 

நோய் உண்டாக காரணங்கள்

  1. ஓரளவு அதிக வெப்பநிலை.
  2. அமிலத் தன்மையுள்ள மண்.
  3. அதிக அளவு நைட்ரஜனும், குறைவான பொட்டாசியமும் உள்ள மண்.
  4. வேர்ப்புழு இருப்பது.
  5. மண் வாழ் நுண்ணுயிர் இருப்பு.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

சவுக்கு, தேக்கு மற்றும் பல்வேறு வனமர வகைகள்.

 

நோய் உண்டாக்கும் கிருமிகள்

வெர்ட்டிசில்லியம் மற்றும் பியூசெரியம் போன்ற பூஞ்சைகளும், சூடோமோனஸ் சோலனேசியாரம் போன்ற பாக்டீரியாக்களும் இளந்தோப்புகளில் நோய் உண்டாக்கும்.

 

நோய் அறிகுறிகள்

அ)     இலைகள் மஞ்சளாகி, விறைத்து, விழுந்து விடுதல்.

ஆ)     பாதிக்கப்பட்ட கிளை அல்லது செடி இறந்துவிடுதல்.

இ)      செல் அழுகல், குறை வளர்ச்சி.

ஈ)      தடிமரத்தின் உள்பகுதி நிறமாற்றம்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

        கண்டறிதல் : தொடர் கண்காணிப்பு மூலம் செடி  இறப்பு கண்டறிதல்.

        அழித்தல் : நோயுற்ற மரங்களை நீக்கி எரித்து விடுதல் அல்லது புதைத்து விடுதல்.

        நோய் எதிர்ப்பு மர இனங்கள் : நோய்க்கு எதிர்ப்பாற்றல் கொண்ட மர இனங்களை

        நடவு செய்தல்.

2. மையல் அழுகல் நோய் (Heart - Rot Disease)

நோய் விளக்கம்

வனத் தோட்டங்களில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் நோய்களில் முதன்மையானது இந்நோயாகும். பூசணப்படலம் மற்றும் மரவகைக்கு ஏற்ப இந்நோயின் தாக்க விகிதம் மாறுபடுகிறது. பொதுவாக பட்டை மற்றும் வெளித் தண்டுப் பகுதியே, பெரிய பாதுகாப்பை மையத் தண்டுப் பகுதிக்கு அளிக்கிறது. வைரம் பாய்ந்த மரங்களை, சுமார் 15-30 ஆண்டு வயதுக்கு பிறகு தாக்குகிறது.

நோய் உண்டாக காரணங்கள்

  1. மரத்தின் உடல்பாகம் மற்றும் பட்டைகளில் ஏற்படும் காயம்.
  2. வேர்ப்பகுதியில் தொற்று எற்பட்டிருந்தால் அதன் வழியே நுழைந்து, ஒவ்வொரு மரமாய் பரவுகிறது.
  3. நோயுற்ற வேர்கள் மற்றும் தேவையற்ற நோயுற்ற மரக்குவியல்கள் மூலம் பரவுகிறது.

 

நோயால் பாதிக்கப்படும்  மர வகைகள்

வேலமரம், வாகை, தேவதாரு, தைலம், பைன், சால், சிசு மற்றும் மருது ஆகியன.

 

நோய் உண்டாக்கும் கிருமிகள்

கேனோடெர்மா, போம்ஸ், ஹைம்னோ சேட்டே, டிரமேட்ஸ் மற்றும் அர்மிலேரியா போன்ற பூஞ்சை இனங்கள்.

 

நோய் அறிகுறிகள்

அ)     முதல் அறிகுறியாக நிறமாற்றம் ஏற்படும். தண்டு மேல்பகுதி பச்சை பழுப்பு நிறமாகவும், தண்டு              உள்பகுதி கருப்பு, கரு ஊதா நிறமாகவும் மாறி இருக்கும்.

ஆ)     பூசணப்படலம்,  பூஞ்சை  முடிச்சுகள், தண்டு வீக்கம், முடிச்சு வீக்கம், உடைந்த மேல் பகுதிகள்,                 தண்டுப்பகுதி காயம் மற்றும் தழும்புகள்,அடிமரப்பகுதி காயம், வெடிப்புகள் போன்றவை                         இருக்கும்.

இ)      வைரம் பாய்ந்த உள் தண்டுப் பகுதியில் ஏற்படும் சிதைவை கண்டறிவது சிரமம். எனினும்                      சாதாரண வைரம் தன் நிறம் இழந்து கருப்பாக மாறி விடும், அதுபோல பாதிக்கப்பட்ட மரத்தின்                தண்டுகள் காணப்படும்.

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அ)     களை எடுக்கும் போது மரங்களில் காயந்த சிராய்ப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆ)     நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மர ரகங்களை பயிரிடலாம்.

இ)      தோப்பிலிருந்து நோயுற்ற மரங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

 

3. ஊதா நிற நோய் (Pink Disease)

நோய் விளக்கம்

வெப்பமண்டல பிரதேசங்களில் அதிக அளவு மழை பெய்யக் கூடிய பகுதிகளில் பரவலாக காணப்படும்.  பூஞ்சை  நோய்க் கிருமியால் எற்படும் இந்நோய் தோப்பாக வளரும் முக்கிய மர இனங்களை தாக்குகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

வெப்பமான காற்று, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் நோய் தீவிரமடைகிறது. நோய்க் கிருமியானது எல்லா வயதுள்ள மரங்களையும் பாதிக்கிறது. காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் மூலம் நோய்த் தொற்று பரவுகிறது. 250 செ.மீ கோடை மழைப் பொழிவுள்ள வெப்ப மண்டல சூழ்நிலைகளில் தோப்புகளில் திடீர்த்தொற்று ஏற்படுகிறது.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

உலகின் பல நாடுகளிலும் பரவலாக காணப்படும் இந்நோய் தைலம் மற்றும் இதர மர இனங்களை தாக்குகிறது. இந்தியாவில், யூகலிப்டஸ் சிட்ரியோடோரா, யூகலிப்டஸ் குளோபுலஸ், யூகலிப்டஸ் கிராண்டிஸ், யூகலிப்டஸ் டெரட்டிகார்னிஸ் ஆகியவற்றையும், மாஞ்சியம், வேம்பு, சவுக்கு, மா, புளி, தேக்கு, சவுண்டால் ஆகியவற்றையும் தாக்குகிறது.

 

நோயை உண்டாக்கும் கிருமிகள்

கார்ட்டீசியம் சல்மானிக்கலர் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

 

நோய் அறிகுறிகள்

  1. செடிகள் மற்றும் இளமரங்களில் எற்படும் நுனிக்கருகல்.
  2. பட்டைக்கச்சை வளையம் ஏற்படுதல்.
  3. அதன் கீழ் பகுதிகளில் பக்கவாட்டில் கிளைத்தல்.
  4. பட்டை வெடிப்பு, பிளவு ஏற்படுதல்.
  5. சொறி நோய் தோன்றி உள்மரப்பகுதி வெளிப்படுதல்.
  6. புரையில் பிசின் வடிதல்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

  1. அதிக மழைப் பொழிவுள்ள பகுதிகளில், நோய் எதிர்ப்பாற்றல் பெற்ற மர ரகங்களை நடுதல்.
  2. நோய் எதிர்ப்பாற்றல் பெற்ற தனி மரங்களை கண்டறிந்து அவற்றை இனப்பெருக்கம் செய்து தோப்புகளை உருவாக்குதல்.
  3. தாமிர பூஞ்சைக் கொல்லிகளை தெளித்தும் கேலிக்சின் தெளித்தும் இளந்தோப்புகளை நோய்த் தாக்குதலில் இருந்து காக்கலாம்.
  4. நோயுற்ற தனி மரங்களை தோப்பை விட்டு அகற்ற வேண்டும்.
  5. மழைக்கு முன்பும் இடையிலும் தெளிக்கலாம்.
  6. நோய் எதிர்ப்பாற்றல் ரகங்களை நட வேண்டும்.

 

4.  வேர் அழுகல் நோய் (Root Rot Disease)

நோய் விளக்கம்

  1. ஒட்டும் தன்மையுள்ள மண், களிமண் நிலம்.
  2. பொருத்தமில்லா இடத்தேர்வு.
  3. தரமற்ற மர இனங்களின் எண்ணிக்கை.
  4. குறைந்த மரபியல் பன்மை.
  5. ஒரே வயதுடைய தோப்புகள்
  6. அதிக வீரியமுள்ள நோய்க் கிருமிகள்.
  7. கிருமிக்கு ஏற்புத் தன்மையுடைய மர இனங்கள்.

 

நோயால் பாதிக்கப்படும் மர வகைகள்

வேலமரம், வாகை, பாக்கு, கொன்றை, சவுக்கு, கோகோ, ஈட்டி, தைலம், மா, பைன், வேங்கை, புங்கம், புளி, மருது போன்ற பல்வேறு மர இனங்களை தாக்கக்கூடியது ஆகும்.

நோயை உண்டாக்கும் கிருமிகள்

கோனோடெர்மா பூஞ்சை பல்வேறு மரவகைகளில் வேர் அழுகலை உண்டாக்குகிறது. பாலிபோரஸ் சொரியே, சால் மரத்திலும், போம்ஸ் அன்னோகல் ஊசி இலை மர இனங்களிலும் பெனியோபோரா ரைசோமார்போ மூலம் தேக்கிலும் நோய் ஏற்படுகிறது.

 

நோய் அறிகுறிகள்

அ)     நுனிக்கருகல் மற்றும் குறைபாடுள்ள வளர்ச்சி.

ஆ)     இலைகள் பழுப்பு நிறமாதல்.

இ)      இளங்குருத்துகள் வாடத் தொடங்கும். நோய் முற்றிய நிலையில் இலைகள் பூராவும் உதிர்ந்து                  மான் கொம்பு தோற்றத்தில் காணப்படும். காற்றில் விழுந்து விடும்.

ஈ)      வனத் தோட்டங்களில் நோய் தாக்கிய மரத்தொகுதி வட்ட வடிவில் இருக்கும். சுற்றிலும் கிருமித்               தொற்று வேர் மூலம் பரவுவதால், வெளி வட்டப் பகுதி குறைந்த பாதிப்புடனும், உள்ள வட்டம்                தீவிர பாதிப்புடனும் இருக்கும்.

உ)      வேர் வழித் தொற்று பரவப் பரவ, பாதிப்பு வட்டம் பெரிதாகி வரும்.

ஊ)     நோயுற்ற மரத்தின் வேர் வெளிப் பகுதிகளில் நோய் வெண்படலம் காணப்படும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

  1. எந்திரமயமாக்கப்பட்ட தோப்புகள், வேர்த் தண்டுகள் மற்றும் வேர்களை நீக்கவும். நல்ல முறையில் மண்ணைக் கிளறிவிட, மர வளர்ச்சியும், நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.
  2. வேர்த்தண்டுகளை முற்றிலுமாக களைய வேண்டும்.
  3. பாதிக்கப்பட்ட மரத்தை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு அடி அகலமும், 2 அடி ஆழமும் 5 அடி நீளமும் கொண்ட குழி எடுத்து விடுவதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம்
  4. எதிர்ப்பாற்றல் கொண்ட பல மர இனங்கள் நடவு செய்தல்.
  5. தக்க சாகுபடி முறைகள், கட்டுக்குள் எரித்தல் மூலம் பூஞ்சையை குறைத்தல் மற்றும் களைக்கட்டுப்பாடு.

5. தண்டு சொறி நோய் (அ) பிளவை நோய் (Stem Canker Disease)

நோய் விளக்கம்

பல்வேறு தோப்பு மரங்களில் காணப்படுகிறது. குறிப்பாக தைல மரத்தில் இந்த பூஞ்சாண தாக்குதல் காணப்படுகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

  1. மரத்தின் தண்டுப்பகுதி மற்றும் கிளைகளில் ஏற்படும்.
  2. நோய்க்கிருமிகள் வளர்ச்சிக்கு உகந்த தட்பவெப்பநிலை.

 

நோயால் பாதிக்கப்படும்  மர வகைகள்

வேலமரம், தைலம், பைன், சால், சிசு, தேக்கு மற்றும் மருது ஆகியன.

 

நோயை உண்டாக்கும் கிருமிகள்

போமா, போமோப்சிஸ் மற்றும் லேசியோடைபிளாபியா போன்ற பூஞ்சைகள் நோய் ஏற்பட காரணமாகின்றன.

 

நோய் அறிகுறிகள்

அ)     சற்றே தாழ்வான தண்டுப் பகுதியிலிருந்து 15-20 செ.மீ. நீளமுள்ள நிலத்தை ஒட்டியுள்ள                          பகுதிகள், தென்மேற்கு பருவமழைக்கு பின்னர் பாதிப்படைகின்றன.

ஆ)     தாழ்வான பட்டை பழுப்பு நிறமடைந்து இறந்து விடும். பிளவு அதிகரித்து பட்டை நீளவாக்கில்                வெடித்து காணப்படும்.

இ)      ஒரு சில பிளவுகளில் பிசின் சுரப்பு காணப்படும்.

ஈ)      பின் வாடிப் போய் இறந்து விடும்.

 

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

களை எடுப்பு மற்றும் மண் வேலைகளின் போது செடிகள் மற்றும் இளம் மரங்களில் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். பொருத்தமான இடத்தேர்வு மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட மர ரகங்களை தேர்வு செய்வது ஆகியன நீண்ட காலத்திற்கு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் வழிகளாகும்.

 

6. தண்டு வாடல் (அ) பட்டைப்புண் நோய்  (Stem Wilt or Blister Bark Disease)

நோய் விளக்கம்

சவுக்கில் ஏற்படும் மிகத் தீவிரமான நோய்களில் இதுவும் ஒன்று. இளம் மற்றும் முதிர்ந்த தோப்புகளில், குறிப்பாக கடலோரப் பகுதி தோப்புகளில் ஏற்படுகிறது. நாட்டின் உள்பகுதிகளிலும் சவுக்கு மரங்களில் இது காணப்படுகிறது.

 

நோய் உண்டாக காரணங்கள்

  1. அதிக வறட்சி மற்றும் நோய் தாக்க ஏதுவான மர இனங்கள்.
  2. டிரைகோஸ்போரியம் வெசிகுலோசம் என்னும் பூஞ்சாண நோய்க் கிருமி காற்றினால் பரவி நல்ல மரங்களின் தண்டுகளில் ஏற்பட்ட காயங்கள் மூலம் தோன்றுகிறது.
  3. தொற்றானது வேர் வரை கீழும், தண்டு மூலம் மேலும், நெடுக்கு வாக்கில் பரவுகிறது.
  4. சவுக்கில் இயல்பிலேயே காணப்படும் வேர்ப்பரவல் காரணமாக வேர் வழியிலும் ஒரு மரத்திலிருந்து பிறிதொரு மரத்திற்கு பரவுகிறது.

 

நோயை உண்டாக்கும் கிருமி

சுப்ரமணியனோஸ்போரா என்னும் கிருமியால் உண்டாகிறது. (டிரைகோஸ்போரியம் வெசிகுளோசம்).

 

நோய் அறிகுறிகள்

அ)     இலை ஊசிகள் மஞ்சள் நிறமடைவது தொடக்க நிலை அறிகுறி.

ஆ)     இலை ஊசிகள் வறண்டு, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிக்கும் பரவுகிறது.

இ)      வேகமான வாடல், பழுப்பு நிறமாதல் மற்றும் நுனிக்கருகல், தனி மரமாகவோ, தோப்பு                             முழுவதுமோ ஏற்படுதல்.

ஈ)      நோய் முற்றிய நிலையில், பட்டைப் புண் தோன்றும்.

உ)      பக்கவாட்டு வேர் மூலமாகவே நோய் பரவுவதால், தொகுதியாகவே மரங்கள் பாதிக்கப்படும்.

நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

  1. பொருத்தமற்ற முறையில் கவாத்து செய்தல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
  2. நோய் தாக்கிய தோப்பில்  இருந்து, நோயுற்ற மரங்களை முழுவதுமாக அகற்றி, எரித்து விட வேண்டும்.
  3. நோய்த் தடுப்பாற்றல் பெற்ற மர ரகங்களை பயன்படுத்த வேண்டும்.
  4. டிரைகோடெர்மா மற்றும் சூடோமோனஸ் போன்ற உயிரி கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தலாம்.
  5.  எக்டோ மைக்கோரைசல் மற்றும் அர்பஸ்குலர் மைகோரைசா போன்ற பூஞ்சாணங்களை செடி நடவுக்கு பயன்படுத்தும் மண் கலவையில் சேர்த்து உபயோகித்தல்.