வெற்றிகரமான மரத்தோட்டங்களை உருவாக்குவதற்கு நல்ல தரமான மரக்கன்றுகளின் உற்பத்தி மிகவும் அவசியமாகும். நாற்றங்கால்களில் இந்த கன்றுகளை பூச்சிகள் மற்றும் நோய்கள் பல்வேறு காரணங்களால் தாக்குகின்றன. இதனால் அவை தங்களின் வீரியத் தன்மையை இழந்து நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. மரக்கன்றுகள் பல்வேறு நோய்களால் தாக்கப்படும் போது விவாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய்களைத் தவிர்க்க நாற்றங்கால்களில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நாற்றங்கால்களில் காணப்படும் நோய்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
நோய்கள்
நோய்களை தொற்று நோய்கள், தொற்றில்லா நோய்கள் என இருவகையாக பிரிக்கலாம். தொற்று நோய்கள் என்பவை நுண்ணுயிரிகளான பூஞ்சைகள் மற்றும் பேக்டீரியாக்களால் ஏற்படுபவை. தொற்றில்லா நோய்கள் என்பவை இயற்கை காரணிகளான மண்ணின் கார/அமிலத் தன்மை, சூரிய வெப்பம், பனி, மண்ணின் முக்கியச் சத்துக்களின் குறைபாடு மற்றும் அதிகப்படியான ஈரத்தன்மையால் ஏற்படுபவை. இந்த நோய்களை சில அறிகுறிகள் மூலம் கண்டுணர்ந்து பின் அவற்றை அறவே போக்க முடியும். இந்த அறிகுறிகள் தான் நோய்களை வெளிப்படுத்தும் அபாய விளக்குகளாக மரக்கன்றுகளில் தென்படுகின்றன. எனவே நோயின் அறிகுறிகளை கூர்ந்து கவனிப்பது மிகவும் அவசியமாகும்.
நோயின் அறிகுறிகள்
ஒரு பூஞ்சையோ அல்லது பாக்டீரியாவோ மரக்கன்றுகளை தொற்றும் போது அவை சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். இந்த அறிகுறிகளாவன;
இந்த அறிகுறிகள் தென்படுமேயானால் கன்றுகள் நோய்வாய்ப்பட்டுள்ளன என அறிந்து கொள்ள முடியும்.
நாற்றுகளை பரிசோதித்தல்
நோய் கண்டறிவதற்கு கன்றுகளை பரிசோதிப்பது மிகவும் அவசியமாகும். மரக்கன்றுகளின் இலைகள், தண்டு, நுனித் தண்டு மற்றும் வேர்களில் ஏதேனும் வித்தியாசமான தொற்றுகள் தென்படுகிறதா என காண வேண்டும். தண்டில் ஈரத் தன்மையை கண்டறிய தண்டின் ஒரு பகுதியை சற்றே கீறிப்பார்க்க வேண்டும். ஒரு சிறு அதிர்வு தருவதன் மூலமாக இலைகள் உதிர்கின்றனவா எனவும் கண்டறியலாம். மேலும் வேர் நல்ல பிடிப்புடன் உள்ளதா அல்லது உடையும் தன்மையுடன் உள்ளதா எனவும் கண்டறிய வேண்டும். இந்த குணாதிசயங்கள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பிறகு கன்றுகள் நோய் வாய்ப்பட்டுள்ளனவா இல்லையா என்று அறிய முடியும்.
நோய்களை கண்டறிதல்
ஒரு கன்றானது நோய்வாய்ப்பட்டால் அதன் திசுக்கள்தான் பெரிதளவு பாதிக்கப்படும், இந்த திசுக்களின் பாதிப்பை வைத்து நோய்களை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவையாவன;
இவைதான் அடிப்படை நோய்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இலைப்புள்ளி நோய், வேர் அழுகல் நோய், வாடல் நோய் மற்றும் கொப்புள நோய்கள் போன்றவை திசு இறத்தல் வகையில் சேரும். இந்நோய்கள் பரவலாக நாற்றங்கால்களில் காணப்படுகின்றன. இலைகளில் மஞ்சள் நிறம் காணப்படும் நாற்றுகள், நாற்றங்கால்களில் பெரிதளவு காணப்படுகிறது. இந்த இலை மஞ்சள் நோய் மண்ணில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாத போது பச்சையம் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிற நோயாக நாற்றுகளில் காணப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நோயை குணப்படுத்துவதை விட நோய் வராத வண்ணம் காப்பது சாலச் சிறந்தது. நாற்றங்கால்களை தூய்மையாக வைத்திருத்தல், விதைப் பாத்திகளை சுகாதாரமாக வைத்திருத்தல், மணலை மட்டுமே விதை பாத்திகளில் பயன்படுத்துல், அதிக அளவில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல். மேலும் பூச்சிகள் நாற்றங்கால்களில் வராமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நோய்கள் தாக்காமல் இருக்க உதவும். மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கினால் அது நோய்களுக்கு சாதகமாக முடியும். இனி நாற்றங்கால்களில் காணப்படும் நோய்களையும் அவற்றின் கட்டுப்பாட்டு முறைகளையும் காண்போம்.
விதை நோய்கள்
விதைகளை சேமித்து வைத்திருக்கும் போது, அதிக ஈரப்பதத்தினால் சில பூஞ்சைகள் தாக்கி நோய்களை உண்டாக்குகின்றன. இதனால் நாற்றங்கால்களில் முளைப்புத்திறன் குறைகிறது. அல்லது முளை விட்டதும் நாற்றுகள் இறந்து போகின்றன. இதற்கு விதைகளைத் தகுந்த பாதுகாப்புடன் துணிப் பைகளில் சேகரித்து வைக்க வேண்டும். ஈரம் தாக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
அறிகுறிகள்
நோய் பாதிக்கப்பட்ட விதைகளில் பூஞ்சைகள் படிந்திருக்கும். கருப்பு, வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் உடையக் கூடிய தன்மையுடன் விதைகள் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
செரிசான் (Cerisan) எனும் மருந்தை 4 கிராம் அளவில் ஒரு கிலோ விதைக்கு கலந்து வைத்தால் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.