நடவு

விதை இனப்பெருக்கம்

நல்ல தாய் மரங்களை குமிழ் தோட்டத்திலோ அல்லது விதைப் பண்ணையிலோ தேர்வு செய்து விதைகளை சேகரிக்க வேண்டும். குமிழ் மரம் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பூத்து ஏப்ரல் - ஜுன் மாதங்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. காய்களில் உள்ள விதைப் பகுதியை நீக்கி நிழலில் உலர வைக்க வேண்டும் ஒரு கிலோவில் 2500 விதைகள் இருக்கும். விதைகளை உடனே மேட்டுப் பாத்திகளில் விதைக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு சேமிக்கப்பட்ட விதைகளில் முளைப்புத் திறன் குறைய ஆரம்பிக்கும். விதைத்த 15 நாளில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முளைப்புத் தன்மை 35-40 நாள்கள் வரை நீடிக்கும். குமிழ் விதைகளின் முளைப்புத் திறன் சராரியாக 75 முதல் 85 விழுக்காடு இருக்கும். நன்கு முளைத்த 30 நாள் வயதுடைய செடிகளை செம்மண், மணல், தொழு உரம் முறையே 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பாலீத்தின் பைகளில் நிரப்பி நடவு செய்ய வேண்டும். பாலீத்தீன் பைகளில் நடப்பட்ட செடிகளை 7-10 நாள்கள் நிழலில் கடினப்படுத்தி வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.

சிறந்த தாய் மரத்தை தேர்வு செய்து அவற்றின் அறுவடைக்கு பிறகு மரத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் தண்டுகளை பயன்படுத்தி பதியன் முறையில் புதிய செடிகளை உருவாக்க முடியும். சுமார் 15-20 செ.மீ. நீளமுள்ள தண்டின் அடிப்பகுதியை ஒரு லிட்டர் நீருக்கு 20 மி.கி என்ற அளவில் IBA வேர்வளர்ச்சி ஊக்கி கலக்கப்பட்ட கரைசலில் நனைத்து நடவு செய்யும் போது அதிகப் படியான வேர்களை தண்டு குச்சிகள் மூலம் நாற்றுகளை உருவாக்கி நடவுக்குப் பயன்படுத்தலாம். இம்முறையில் உருவாக்கப்படும் நாற்றுகள் ஒரே மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படும்.

நடவு

நன்கு உழவு செய்த நிலத்தில் இரண்டு கன அடி அளவு உள்ள குழி தோண்ட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மக்கிய தொழுஉரம் ஐந்து கிலோவுடன் வண்டல் மண்ணை கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். குழியின் நடுவே குமிழ் கன்றை நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு இடைவெளி

குமிழ் மரத்தினை தனி தோப்பாகவும் பண்ணைக் காடுகளிலும் நடவு  செய்யலாம்.