சாகுபடி முறை

நீர்ப்பாசனம் 

குமிழ் மரம் நடவு செய்ததில் இருந்து முதல் மூன்று மாதங்களில் வாரம்  இருமுறையும் அதற்கு மேல் 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுதல் வேண்டும் முதல் 3- 4 ஆண்டுகளுக்கு நீர் பாய்ச்சுவதால் சிறந்த தடிமரங்களை பெற இயலும். மரத்தின் வளர்ச்சி நாம் மரத்திற்கு கொடுக்கும் நீரின் அளவை பொருத்தே அமையும். சொட்டுநீர்ப் பாசனம் பயன்படுத்துவதால் நீரை சேமிப்பதுடன் களைகளைக்     கட்டுப்படுத்த இயலும்.

களையெடுத்தல்

குமிழ் தோப்புகளில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு களையின்றி பாதுகாக்க வேண்டும். களைகள் மரத்தின் வளர்ச்சியை பாதிப்பதுடன்   பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு காரணியாக அமைகிறது. முதல் ஆண்டில் மூன்று முறையும் இரண்டாம் ஆண்டில் இரண்டு முறையும் பின்பு ஆண்டுக்கு ஒரு முறையும் களை எடுக்க வேண்டும்.

குமிழ் சார்ந்த வேளாண் காடுகள்

வேகமாக வளரும் தன்மை, மரத்தின் பயன்பாடு காரணமாக வேளாண் காடு திட்டத்திற்கு சிறந்த மரமாக பரிந்துரைக்கப்படுகிறது. குமிழ் மரங்களிடையே உளுந்து, நிலக்கடலை, முருங்கை, பயறு வகைகள், மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களை முதல் மூன்றாண்டு பயிரிட்டு பயனடையலாம். குமிழ் தோட்டத்தில் உள்ள தட்பவெப்பநிலை சமவெளிப் பகுதியில் மிளகு வளர்க்க உகந்ததாக அமைந்துள்ளது.

கவாத்து செய்தல்

குமிழ் நடவு செய்த ஓராண்டில் 15 அடி உயரம் வளர்ந்து விடும். ஆகையால் முதல் மூன்று ஆண்டுகள் வரை சரியான முறையில் கவாத்து செய்தால் சிறந்த வளர்ச்சியடைந்த மரங்கள் பெற இயலும். கவாத்து செய்யும் போது தண்டுப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். அதிகப்படியான வளரும் பக்க கிளைகளை உரிய காலத்தில் கத்தி அல்லது கத்தரிக்கோல் கொண்டு 2-5செ.மீ விட்டு வெட்டிவிட வேண்டும். கவாத்து செய்யும் போது பட்டை உரியாமலும் மரத்திற்கு காயம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களைதல்

குமிழ் மரத் தோட்டங்களை 2 x 2 மீ. இடைவெளியில் நடவு செய்யும் போது நட்ட மூன்று ஆண்டுகள் முடிவில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும். இம்மரங்களை காகிதக் கூழ் உற்பத்திக்கு விற்பனை செய்ய இயலும். நடவு செய்த ஆறு ஆண்டுகளில் ஒரே வரிசையில் உள்ள மரங்களில் ஒரு மரம் விட்டு அடுத்த மரத்தை அறுவடை செய்து, ஒட்டு பலகை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யலாம். வளைந்த மற்றும் நோய் தாக்கிய மரங்களையும் அகற்றிவிட வேண்டும் இவ்வாறு அறுவடை செய்வதால் நல்ல கனமான மரங்களை 12-ம் ஆண்டு முதல் பெற இயலும்.