An open source content management platform.
உழவர்களால் விரும்பி வளர்க்கப்படும் மர வகைகளில் குமிழ் மரம் முக்கியத்துவம் வாய்ந்தது. குமிழ் வேகமாக வளரக் கூடிய மர வகைகளில் ஒன்றாகும். குமிழ் மரம் 10 ஆண்டுகளில் 70 முதல் 85 செ.மீ சுற்றளவும் 20 மீட்டர் வரை உயரமும் வளரும் தன்மை கொண்டது.
குமிழ் இந்தியாவைத் தாயகமாக கொண்டிருந்தாலும் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கனடா, நைஜீரியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இயற்கையான இலையுதிர் காடுகள், சால் மற்றும் தேக்கு காடுகள் பசுமை மாறா காடுகளிலும் பரவி உள்ளது.
குமிழ் மரத்தின் பயன்பாடுகள்
குமிழ் மரம் தேக்குமர குடும்பத்தை சார்ந்ததால் மரவேலைப்பாடுகளுக்கு உகந்த மரமாக கருதப்படுகிறது. குமிழ் மரம் பன்முக பயன்பாடுகளை கொண்டது.
தடிமரம்
வேர்
குமிழ் மரத்தின் வேர்கள் தசமூலம் தயாரிக்க முக்கிய மூலப் பொருளாக பயன்படுகிறது. வயிற்றுக் கட்டிகள், ஆந்த்ராக்ஸ், குருதி நோய்கள், வலிப்பு, முடக்கு வாதம், பெரியம்மை மற்றும் தோல் அரிப்பு போன்றவற்றுக்கு இதன் வேர் மருந்தாக பயன்படுகிறது.
பழம்
பழம் சிறந்த குளிர்ச்சியூட்டியாக இருப்பதால் தலையில் தேய்த்துக் குளிக்க உடலின்
வெப்பம் தணிகின்றது.
இலை
இலை புரதச்சத்து மிகுந்து உள்ளதால் கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக
பயன்படுகிறது.
மண் தட்ப வெப்பநிலை
நல்ல வடிகால் வசதியுடைய வளமான செம்மண், வண்டல் மண், சுண்ணாம்பு சத்துமிக்க மண் போன்ற மண் வகைகளில் நன்கு வளரும். ஆழமற்ற வளம் குன்றிய மண்ணில் குமிழ் மரம் வளர்ச்சி குன்றி காணப்படும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 க்குள் இருக்க வேண்டும். நீர் தேங்கும் மண்ணில் குமிழ் அதிகம் வளராது.
குமிழ் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் வரையுள்ள நிலபரப்பில் நன்கு வளரும். சராசரி வெப்பநிலை 20˚ முதல் 30˚ செல்சியஸ் வரையிலும் ஆண்டு மழையளவு 750 முதல் 2500 மி.மீ வரை உள்ள பகுதிகளில் அதிகமான வளர்ச்சியுடன் காணப்படும். இது ஓர் சிறந்த ஒளி விரும்பி மரமாகும். அதிகப்படியான சூரிய வெளிச்சத்தால் நன்கு வளரும் தன்மை கொண்டது.